துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு முடித்து வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு முடித்து வைப்பு

புதுடெல்லி: துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை, ‘சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்’ எனக்கூறி, உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப். 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இவருக்கு எதிராக அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் மாபா. பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவ்விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம். எல். ஏ. ,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் சபாநாயகர் எடுக்கவில்லை.

அதனால், திமுக தரப்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘சபாநாயகர் உத்தரவே இறுதியானது’ எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, திமுக சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த மேற்கண்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே அமர்வில் கடந்த 4ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 11 எம்எல்ஏ. க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில், கடந்த 3 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்து வருவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சட்டப் பேரவை செயலாளர் தரப்பில், ‘வழக்கில் குறிப்பிட்டுள்ள 11 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் பதிலளித்த பின்னர், சபாநாயகர் முடிவெடுப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, ‘சட்டப் பேரவை விதிகளின்படி, சபாநாயகர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்.

நோட்டீஸ் தொடர்பாக சபாநாயகருக்கு கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது’ எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

.

மூலக்கதை