மீண்டும் பேனர் கலாச்சாரம்: சுங்குவார்சத்திரத்தில் முதல்வரை வரவேற்று பேனர், கட்அவுட் வைத்ததால் பரபரப்பு...அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டும் பேனர் கலாச்சாரம்: சுங்குவார்சத்திரத்தில் முதல்வரை வரவேற்று பேனர், கட்அவுட் வைத்ததால் பரபரப்பு...அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது வழக்கு

பெரும்புதூர்: பெரும்புதூரில் நேற்று புதிய டயர் தொழிற்சாலை திறந்து வைப்பதற்காக வருகை வந்த முதல்வரை வரவேற்று ஏராளமான கட்-அவுட், பேனர்கள்  வைக்கப்பட்டன. மீண்டும் பேனர் கலாச்சாரம் உருவெடுத்து விடுமோ என்ற அச்சத்தில், இதுதொடர்பான புகாரின் பேரில், அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட  20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் ஒருவரது மகன் திருமணத்தையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலையில் பேனர்கள்  வைக்கப்பட்டது.

பல்லாவரத்தை சேர்ந்த சுப (23) என்பவர், கனடா செல்வதற்கான தேர்வை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் எழுதிவிட்டு, இந்த  சாலை வழியாக ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் மீது எதிர்பாராத விதமாக பேனர் சரிந்து விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

  அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த தண்ணீர் லாரியில் சிக்கி சுப பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து  கட்-அவுட், பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

மீண்டும் பேனர் கலாச்சாரம் உருவாகிவிடும் அளவுக்கு சுங்குவார்சத்திரம் பகுதியில் முதல்வரை வரவேற்கும் வகையில் நேற்று பேனர்கள், கட்அவுட்கள்  வைக்கப்பட்டிருந்தன. அதன் விவரம்:பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த கண்ணாந்தாங்கல் பகுதியில் ஒரு தனியார் டயர் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

இதை, முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி, நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி, சுங்குவார்சத்திரம் நுழைவு வாயிலில் முதல்வர், துணை முதல்வர் புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள்  எம். சி. சம்பத், பெஞ்சமின், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோரின் பெயர்களுடன் பெரும்புதூர் ஒன்றிய அதிமுக சார்பில்  ஏராளமான ராட்சத கட்அவுட் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் கண்ணந்தாங்கல் பகுதியில் ஜெயலலிதா, முதல்வர், துணை முதல்வர் படங்களுடன் பிரமாண்ட பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.   இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்றனர்.   பொதுமக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியது. உடனே சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வருவாய் ஆய்வாளர் பத்மபிரியா புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, மக்களின் உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விளம்பர பேனர், கட்-அவுட் வைத்திருந்ததாக பெரும்புதூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சிங்கிலிபாடி ராமச்சந்திரன்  உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை