காப்பக குழந்தைகளின் குறைகளை கேட்டால் குறைஞ்சா போவீங்க? பெயரளவில் ஆய்வு நடப்பதாக குற்றச்சாட்டு!

தினமலர்  தினமலர்
காப்பக குழந்தைகளின் குறைகளை கேட்டால் குறைஞ்சா போவீங்க? பெயரளவில் ஆய்வு நடப்பதாக குற்றச்சாட்டு!

கோவை:குழந்தைகள் காப்பக ஆய்வின் போது, ஆவணங்களை மட்டுமே சரிபார்ப்பதாகவும், குழந்தைகளை நேரடியாக சந்தித்து பேசுவதில்லை என்றும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. இதனால், குழந்தைகள் சந்திக்கும் பாலியல் புகார்கள், வெளி உலகுக்கு தெரியாமலே போய் விடுகின்றன.கோவை மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 53 காப்பகங்கள் செயல்படுகின்றன.
இங்கு, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாத்து பராமரிக்கப்படுவதுடன், அவர்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெயரளவுக்கு ஆய்வு!காப்பக குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக ஆர்வலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம், காப்பகங்களுக்கு அளிக்கப்படும் பெருந்தொகை பயன்பாடு குறித்து, குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காப்பகங்களில் நேரில் ஆய்வு செய்கின்றனர்.இந்நிலையில், பெரும்பாலும் திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில், குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்பே, ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், ஆவணங்களை மட்டுமே சரிபார்ப்பதாகவும், குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இதை மறுக்கிறார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுந்தர்.அவர் கூறுகையில், ''என் தலைமையில், மருத்துவர், உளவியல் ஆலோசகர், குழந்தைகள் நலத்துறை அலுவலர் கொண்ட குழுவினர், முன்னறிவிப்பின்றி காப்பகங்களில், திடீர் ஆய்வில் ஈடுபடுகிறோம். மாலை, 4:00 மணிக்கே ஆய்வுக்கு செல்வதால், குழந்தைகளையும் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிகிறோம்.காப்பக நிர்வாகிகளுக்கான கூட்டத்திலும், காப்பகத்திற்கு குறைந்தபட்சம் தலா இரண்டு குழந்தைகளை கலந்து கொள்ள செய்து, அவர்களது கருத்துக்களையும் கேட்டறிகிறோம்.
இதுமட்டுமின்றி, காப்பகம்தோறும் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகள் மூலமும், கோரிக்கைகள், ஆலோசனைகளை குழந்தைகள் தெரிவிக்கின்றனர்,'' என்றார்.இவர் கூறுவது போல் நடந்தால் மகிழ்ச்சியே. அதே வேளையில், காப்பகங்களில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்களில்தான், பல பாலியல் புகார்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ஆகவே, காப்பக குழந்தைகளின் பாதுகாப்பில் நிஜமாகவே அக்கறை உள்ளவராக இருந்தால், காப்பகங்களுக்கு திடீர் விசிட் செய்து, குழந்தைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும்.செய்வீர்களா மிஸ்டர் சுந்தர்?

மூலக்கதை