தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு ஏன்?: பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு ஏன்?: பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு திடீரென விருப்ப ஓய்வு பெறுவதாக தலைமை செயலாளருக்கு கடிதம்  எழுதியுள்ளார். ₹2020 கோடி மதிப்புள்ள டெண்டர் விவகாரத்தில்தான் அவர் விருப்ப ஓய்வு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் சந்தோஷ் பாபு (51).

இவர், 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ. ஏ. எஸ். தேர்ச்சி பெற்று, தமிழக  அரசு பணியில் சேர்ந்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசில் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். தற்போது தகவல் தொழில்நுட்பத்  துறையின் முதன்மை செயலாளராக பணியாற்றுகிறார்.

டான்பினெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இருக்கிறார்.

இவர், சில நாட்களுக்கு முன், தமிழக தலைமை செயலாளருக்கு விருப்ப ஓய்வு கடிதத்தை (வி. ஆர். எஸ். ) இ-மெயில் மூலம் அளித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. கடிதத்தில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற விரும்புகிறேன்’’ என்று சந்தோஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.   அவரது விருப்ப ஓய்வு கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 20ம் தேதியுடன் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தகவல்  வெளியாகியுள்ளது.

இன்னும் 9 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் சந்தோஷ் பாபு திடீரென்று விருப்ப ஓய்வு பெறுவது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. புதிதாக நிறுவனம் தொடங்க இருப்பதால் அவர் விருப்ப ஓய்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ₹2020 கோடி மதிப்புள்ள டெண்டரை சர்ச்சைக்குரிய வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் டெக்னாலஜிக்கு வழங்க  வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர்  ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து சந்தோஷ்பாபுவிடம் கேட்க முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆனாலும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ்  அதிகாரி விருப்ப ஓய்வுக்கு கடிதம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை