'பண்பாடு முக்கியம்!' ஜல்லிக்கட்டு விழாவில், வணிக நோக்கம் கூடாது

தினமலர்  தினமலர்
பண்பாடு முக்கியம்! ஜல்லிக்கட்டு விழாவில், வணிக நோக்கம் கூடாது

திருப்பூர்:'ஜல்லிக்கட்டு விழா, கலாச்சாரம், பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்; வணிக நோக்கத்தில் நடக்கக்கூடாது,' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில், ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, வரும் பிப்., 2ம் தேதி அலகுமலையில் நடக்கிறது.

இந்நிலையில், விழா ஏற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் பேசியதாவது:ஜல்லிக்கட்டுக்கு, 24 மணி நேரத்துக்கு முன், அனைத்துவித ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும். பங்கேற்கும் காளை மற்றும் வீரர்கள் விவரம் பதிவு செய்து கொள்ள வேண்டும். விதிமுறைப்படி, ஜல்லிக்கட்டு நடப்பதை, அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஏற்பாடுகளை சொந்த பொறுப்பில் மேற்கொள்ளவும், விழாவை முழுமையாக காப்பீடு செய்வதாகவும், விழா ஏற்பாட்டாளர்கள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழா, கலாச்சாரம், பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்; வணிக நோக்கத்தில் இருக்கக்கூடாது.அனைத்து காளைகளையும், கால்நடைத்துறை பரிசோதித்து அனுமதி வழங்க வேண்டும்.
பார்வையாளர் 'கேலரி' மற்றும் தடுப்புகளை, வலுவாக அமைக்க வேண்டும். காளைகளுக்கு, ஊக்க மருந்தோ, எரிச்சலுாட்டும் மருந்தோ கொடுக்கவில்லை என்பதை, ஆய்வின் மூலம் உறுதி செய்து கொள்வது அவசியம்.நிழல்பந்தல் வசதியும், காளைகளுக்கு தீவனம், தண்ணீர் வசதி செய்ய வேண்டும். வாடிவாசல் முன்பாக வழிமறித்து, காளைகளை தடுக்க கூடாது. வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க, தேங்காய் நார் பரப்பி வைக்க வேண்டும்.ஜல்லிக்கட்டு விழா நிகழ்வுகளை கண்காணிக்க வசதியாக, 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். விழா முழுவதையும், வீடியோ பதிவு செய்து, கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
காளைகளுக்கு மது கொடுத்திருந்தால், ஜல்லிக்கட்டில் அனுமதிக்க கூடாது.திடலுக்கு வருவதற்கு முன்பாகவும், வந்துசென்ற பிறகும், தலா, 20 நிமிடம் காளைகளுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவர் குழு, சுகாதாரத்துறை மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார்நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுகுமார், திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், எஸ்.பி., திஷா மிட்டல் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

மூலக்கதை