எப்போது? நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் சேர்மன் தேர்தல்... திட்டப் பணிகள் நடைபெறாததால் மக்கள் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
எப்போது? நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் சேர்மன் தேர்தல்... திட்டப் பணிகள் நடைபெறாததால் மக்கள் எதிர்பார்ப்பு

வேப்பூர்:ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தும், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் சேர்மன் தேர்தல் நடைபெறவில்லை. ஒன்றிய தலைமை இல்லாத நிலையில், திட்டப்பணிகள் நடைபெறாததால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சேர்மன் தேர்தல் எப்போது நடைபெறும் என கேள்வி எழுப்புகின்றனர்.கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள நல்லுார் ஒன்றியத்தில் 64 கிராமங்கள், மங்களூர் ஒன்றியத்தில் 66 கிராமங்கள் உள்ளன. இங்கு, கடந்த 11ம் தேதி சேர்மன் தேர்தல் நடந்தது. அப்போது எழுந்த பிரச்னையால், தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.நல்லூர் ஒன்றியம்நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 21 கவுன்சிலர் பதவி இடங்களில் தி.மு.க., 7, அ.தி.மு.க., 7, பா.ம.க., 2, சுயேச்சைகள் 5 இடங்களை கைப்பற்றின. தி.மு.க.,வில் முத்துக்கண்ணு, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், பா.ம.க., வின் செல்வி ஆடியபாதம் ஆகியோர் சேர்மன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 11 கவுன்சிலர்கள் கொண்ட தரப்பு, சேர்மன் பதவியை கைப்பற்றும் என்பதால் சுயேச்சைகளின் விலை 'ஜெட்' வேகத்தில் எகிறியது.இந்நிலையில், சேர்மன் தேர்தலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவ விடுப்பில் சென்றதால், மறு தேதி குறிப்பிடப்படாமல், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.மங்களூர் ஒன்றியம்மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 24 கவுன்சிலர்களில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 10, பா.ஜ., 1, தே.மு.தி.க., 1, சுயேச்சைகள் 2 இடங்களை கைப்பற்றினர். தி.மு.க.,வில் சுகுணா சங்கர், அ.தி.மு.க.,வில் மலர்விழி இளங்கோவன் சேர்மன் பதவிக்கு களத்தில் இருந்தனர். சேர்மன் பதவியை கைப்பற்ற 13 கவுன்சிலர்கள் தேவை.சேர்மன் பதவிக்கான ஓட்டுப்பதிவில், தி.மு.க., 12, அ.தி.மு.க., 12 ஓட்டுக்கள் பெற்றன. குலுக்கல் முறையில் சேர்மன் தேர்வை அ.தி.மு.க., ஏற்காததால், மறு தேதி அறிவிப்பின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
தலைமை இல்லை
மாவட்டத்தில் 12 ஒன்றியத்தில் தேர்தல் முடிந்து சேர்மன், துணை சேர்மன்கள் பதவி ஏற்றுக் கொண்டு விட்டனர். அவர்கள் வரும் சட்டசபை தேர்தலை கருதி, கிடப்பில் உள்ள திட்டப் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.ஆனால், நல்லுார், மங்களூர் ஒன்றியங்களில் மட்டும் சேர்மன் பதவி காலியாக உள்ளது. தனி அலுவலரின் பதவிக்காலம் முடிந்ததால், திட்டப் பணிகள் நடைபெறவில்லை.தேர்தல் நடந்தும் பலனில்லைகடந்த 3 ஆண்டுகளாக தனி அலுவலர்கள் நிர்வாகம் செய்த போது, குடிநீர், தெருமின் விளக்கு, அவ்வப்போது சுகாதார பணிகள் மட்டும் கவனிக்கப்பட்டு வந்தன. கிராம மக்களின் கோரிக்கைகள், திட்டங்களை செயல்படுத்த பல வரைமுறைகள் இருந்ததால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து, பிரதிநிதிகளை பொதுமக்கள் தேர்வு செய்தனர்.ஆனால், சேர்மன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய தலைமை இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்தும் பலனில்லை என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.இரண்டு ஒன்றியங்களிலும், சேர்மன் தேர்தல் எப்போது நடக்கும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நிர்வாக பணி கவனிப்பது யார்?
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதால், தனி அலுவலரின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால், நல்லுார், மங்களூர் ஒன்றியத்தில் சேர்மன் மற்றும் துணை சேர்மன் தேர்வு செய்யப்படாததால், ஒன்றிய நிர்வாக பணிகளை கவனிப்பது யார் என குழப்பம் நிலவுகிறது.

மூலக்கதை