தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் எல்லை பஞ்சாயத்து!மூன்று கிராம ஊராட்சி மக்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் எல்லை பஞ்சாயத்து!மூன்று கிராம ஊராட்சி மக்கள் தவிப்பு

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், இரு போலீஸ் ஸ்டேஷன் எல்லை பிரச்னையால், மூன்று கிராம ஊராட்சி பொதுமக்களும், போலீசாரும் தவித்து வருகின்றனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், பேரூர் சரகத்துக்கு உட்பட்டு தொண்டாமுத்துார், பேரூர், ஆலாந்துறை, காருண்யா நகர் ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், ஜாகீர்நாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகள், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் வருகின்றன. இதனை ஒட்டிய மற்ற பகுதிகள், தொண்டாமுத்துார் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டு வருகின்றனர்.நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைபட்டிணம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், கல்லுாரி, மருத்துவமனை, ஒன்றிய அலுவலகம், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகம், மார்க்கெட் செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, தொண்டாமுத்துார் வந்து செல்கின்றனர்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும் ஆலாந்துறை செல்ல வேண்டியுள்ளது.இப்பகுதிகளில் இருந்து, ஆலாந்துறை செல்ல பஸ் வசதி இல்லை. தொண்டாமுத்துார் வந்து ஆலாந்துறைக்கு பஸ் மாறிச் செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள், புகார் அளிக்க, அருகில் உள்ள தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷனை தவிர்த்து, இரண்டு பஸ்கள் மாறி, ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருகின்றனர்.இப்பகுதியில், அடிக்கடி மனித - விலங்கு மோதலும் ஏற்படுகிறது. இச்சம்பவங்களுக்கு, இரவு நேரமாக இருந்தாலும், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே போலீசார் வர வேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இம்மூன்று ஊராட்சிகளையும், தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையுடன் இணைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேரூர் சரக டி.எஸ்.பி., வேல்முருகனிடம் கேட்டபோது, ''பொதுமக்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக, வெள்ளிமலைபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையுடன் இணைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை