கோயம்பேட்டிற்கு வந்தது எகிப்து வெங்காயம்

தினமலர்  தினமலர்
கோயம்பேட்டிற்கு வந்தது எகிப்து வெங்காயம்

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, எகிப்து வெங்காயம் வந்த நிலையில், கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் அதிகமாக உள்ளது. இம்மாநிலங்களில் பெய்த மழையால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்து, செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் விலை, படிப்படியாக உயர்ந்தது. சில நாட்களுக்கு முன், 1 கிலோ வெங்காயம், 200 ரூபாய்க்கு விற்பனையானது.

நாடு முழுதும் உள்ள வெங்காய விலையை கட்டுப்படுத்த, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து, 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம் குளிர்சாதன கன்டெய்னர்களில் மும்பை வந்தடைந்தது. அங்கிருந்து, 60 டன் வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் காலை வந்தது.

எகிப்து வெங்காயம், இந்திய வெங்காயத்தை விட பெரிதாக உள்ளது. ஒரு வெங்காயம், 200 முதல், 300 கிராம் எடை உள்ளது. மார்க்கெட்டில், 1 கிலோ எகிப்து வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இந்நிலையில், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், இந்திய வெங்காயம், கிலோ, 100 முதல், 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதைபோல், சின்ன வெங்காயம் கிலோ, 100 முதல், 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று காலையும், 60 டன் வெங்காயம் கோயம்பேடிற்கு வந்தது. நேற்றைய நிலவரப்படி, 96 - 100 ரூபாய் வரை விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:எகிப்து வெங்காயம் குளிர்சாதன கன்டெய்னர்களில் வருகின்றன. இதனால், குடோனில் காயவைத்து விற்பனை செய்ய வேண்டி உள்ளது.இந்த வெங்காயத்தில் காரத்தன்மை குறைவாகவும், கண் எரிச்சல் ஏற்படுத்தாத வகையிலும் உள்ளது. இந்திய வெங்காயத்தை போல், எகிப்து வெங்காயம் அதிக நாட்கள் தாக்கு பிடிக்காது. வெங்காயம் வாங்குவதை விட, எகிப்து வெங்காயத்தை பார்க்க வரும் கூட்டம் அதிகமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை