40 நாளில் 27 இடங்களில் கைவரிசை திருட செல்லவில்லை என்றால் தூக்கம் வராது

தமிழ் முரசு  தமிழ் முரசு
40 நாளில் 27 இடங்களில் கைவரிசை திருட செல்லவில்லை என்றால் தூக்கம் வராது

சேலம்: சேலத்தில் 40 நாளில் 27 இடங்களில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து முருகன் சிலை, 8 பைக், 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் ஒரு நாள் திருட செல்லவில்லை என்றாலும் தூக்கம் வராது என்று கொள்ளையன் தெரிவித்துள்ளான். சேலம் இரும்பாலை கணபதிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் கார்த்திகேயன் (35).

கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அங்கிருந்த முருகன் சிலை, ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார். இது குறித்து கார்த்திகேயன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், கார்த்திகேயனின் வீட்டினுள் நுழையும் மர்மநபர் அங்கிருந்து முருகன் சிலை திருடிச்செல்வது தெரிந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தேடி வந்தனர்.

இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து சூரமங்கலம், பள்ளப்பட்டி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது.

கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கந்தம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஓமலூர் செல்லபிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்த சப்பாணி (எ)) திக்குவாயன் (எ) அய்யந்துரை (48) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 40 நாளில் 27 இடங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது.

அவனிடமிருந்து முருகன் சாமி சிலை, 8 பைக்குகள், 10 பவுன் நகை, ஒரு மூட்டை கவரிங் நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ‘ஒரு நாள் திருட செல்லவில்லை என்றாலும் தூக்கம் வராது’ என்று கொள்ளையன் அய்யந்துரை தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை