பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி

தினகரன்  தினகரன்
பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுடெல்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை சீர் செய்வதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளபோதிலும் தற்போது மேலும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2வது காலாண்டில் 4.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தது. அதை சீர்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும் நுகர்பொருள் வர்த்தகம் மேம்படுவதற்கு உதவும் வகையில் அரசு வங்கிகள் கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ.5 லட்சம் கோடிஅளவிற்கு கடன்கள் வழங்கியுள்ளன.இதுதவிர, அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பணியிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மூலக்கதை