உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ேதர்தல் தொடர்பான அனைத்து உத்தரவுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது.

இதையடுத்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 3ம் தேதி அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி வேட்புமனு தாக்கல் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம்  கடந்த 5ம் தேதி இரவு அவசர உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்ைல என்றும் தெரிவித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக நேற்று இரவு முதல்வருடன் தலைமை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது? 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவில், ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து உத்தரவுகளும் திரும்ப பெறப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அமலில் இருந்த ேதர்தல் நடத்தை விதிகள் அனைத்து திரும்ப பெறப்பட்டுவிட்டன. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் பெரிய மாவட்டங்கள்.

இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக மொத்த உள்ளாட்சி பதவிகளின் எண்ணிக்கையில் 20 சதவீத பதவிகள் இந்த மாவட்டங்களில் உள்ளன.

இந்த பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2 அல்லது 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம். இது தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை