வெற்றி மாலை யாருக்கு? மாவட்டத்தில், 2,747 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்

தினமலர்  தினமலர்
வெற்றி மாலை யாருக்கு? மாவட்டத்தில், 2,747 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஊரகத்தில், 2,747 பதவிகளுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள, 20.63 லட்சம் வாக்காளரில், 48 சதவீத வாக்காளருக்கு மட்டுமே, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம், உடுமலை, பல்லடம், வெள்ளகோவில், காங்கயம் என, ஐந்து நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில், ஐந்து லட்சத்து, 37 ஆயிரத்து, 729 ஆண்கள்; ஐந்து லட்சத்து, 29 ஆயிரத்து, 984 பெண்கள்; இதர வாக்காளர் 160 பேர் என, 10 லட்சத்து, 67 ஆயிரத்து, 873 வாக்காளர் உள்ளனர்.மாவட்டத்தில், 265 ஊராட்சிகளில், நான்கு லட்சத்து, 91 ஆயிரத்து, 651 ஆண்கள்; ஐந்து லட்சத்து, 4 ஆயிரத்து, 050 பெண்கள்; இதர வாக்காளர், 64 பேர் என, ஒன்பது லட்சத்து, 95 ஆயிரத்து, 765 வாக்காளர் உள்ளனர்.
20.63 லட்சம் வாக்காளர்
மாவட்ட அளவில், 10 லட்சத்து, 29 ஆயிரத்து, 380 ஆண்கள்; 10 லட்சத்து, 34 ஆயிரத்து, 034 பெண்கள்; 224 திருநங்கையர் என, 20 லட்சத்து, 63 ஆயிரத்து, 638 வாக்காளர் உள்ளனர். மொத்த வாக்காளரில், 48 சதவீத வாக்காளருக்கு மட்டுமே, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
426 பதவிகளுக்கு தேர்தல் இல்லை
திருப்பூர் மாநகராட்சியில், 60 வார்டுகள்; ஐந்து நகராட்சிகளில், 120; 16 பேரூராட்சிகளில், 246 என, 426 வார்டுகள் உள்ளன. மாவட்டத்தில், 265 ஊராட்சிகளின் தலைவர் மற்றும், 2,295 ஊராட்சி மன்ற உறுப்பினர்; 170 ஒன்றிய கவுன்சிலர், 17 மாவட்ட கவுன்சிலர் என, 2,747 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி, ஐந்து நகராட்சி, 16 பேரூராட்சிகளின், 426 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் திருவிழா
இதன்மூலம், மாவட்டத்தில் உள்ள, 10 லட்சத்து, 67 ஆயிரத்து, 873 வாக்காளர்களுக்கு, உள்ளாட்சி தேர்தல் கிடையாது. ஊரகத்தில் உள்ள, ஒன்பது லட்சத்து, 95 ஆயிரத்து, 765 வாக்காளர் மட்டுமே, உள்ளாட்சி தேர்தல் திருவிழாவை கொண்டாட உள்ளனர்.
வேட்புமனுதாக்கல் எங்கே?
வரும், 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை, வேட்பு மனு தாக்கல் நடக்கும். ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, ஊராட்சி அலுவலகம்; ஒன்றிய கவுன்சிலர் (வட்டா ஊராட்சி பி.டி.ஓ.,) மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு (கி.ஊ- பி.டி.ஓ.,), ஒன்றிய அலுவலகங்கள்; மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருவேறு இடத்திலும், வேட்புமனு தாக்கல் நடக்கும்.வேட்புமனு பரிசீலனை, 16ம் தேதியும், வாபஸ் பெற 18ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படும்; அன்று மாலையே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். முதல்கட்ட தேர்தல், 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல், 30ம் தேதியும் நடக்கிறது.ஓட்டு எண்ணிக்கை, ஜன., 2ம் தேதி, வட்டார அளவிலான, 13 ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடக்கும்.
ஜன., 6ல் தேர்வான நிர்வாகிகள் பதவி யேற்பு விழாவும், 11ம் தேதி மாவட்ட ஊராட்சி, ஒன்றியங்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர்களுக்கான, மறைமுக தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.யார் தேர்தலில் போட்டியிடப்போகிறார்கள், வெற்றி வாய்ப்பு யாருக்கு என இப்போதே, கிராமங்களில், பரபரப்பு காணப்படுகிறது.

மூலக்கதை