சேதமடைந்த வீடுகளில் குடியிருக்க என்ன ஒரு தைரியம்! எச்சரித்தும் காலி செய்யாமல் அடம்!

தினமலர்  தினமலர்
சேதமடைந்த வீடுகளில் குடியிருக்க என்ன ஒரு தைரியம்! எச்சரித்தும் காலி செய்யாமல் அடம்!

கோவை:பார்க்கவே பயமாயிருக்கிறது, சிங்காநல்லுாரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள். மழையில் ஊறி, சிமென்ட் உதிர்ந்து காணப்படும் இக்குடியிருப்புகளில் வசிப்பவர்களோ, நாட்களை தைரியமாக கழித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் மழை காரணமாக, உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இக்குடியிருப்புகளை காலி செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும்.கோவை சிங்காநல்லுாரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி தவணை அடிப்படையில் விற்பனை செய்த, 960 வீடுகள் உள்ளன. இவ்வீடுகளை கட்டி, 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.இதனால் சிதிலமடைந்து வசிக்க லாயக்கற்று உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், சிதிலமடைந்த வீடுகள் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் வீடுகளை காலி செய்து, வெளியேற வேண்டும் என்று வீட்டு வசதி வாரியம் ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது.அதோடு, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு, நேரில் சென்றும் ஒலிபெருக்கி வாயிலாக வாரிய ஊழியர்கள் எச்சரித்தனர். ஆனாலும் வீடுகளை காலி செய்து வெளியேற, அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.மழையில் ஊறிப்போயுள்ள குடியிருப்புகளின் சுவர்கள், பார்ப்போரை பயமுறுத்துகின்றன.
பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், குடியிருப்போருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தக்க நடவடிக்கை எடுக்க- மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வாயிலாகவும், ஒலிபெருக்கி வாயிலாகவும் பலமுறை எச்சரித்து விட்டோம். கோட்டாட்சியர், கலெக்டர் ஆகியோரும் அறிவிப்பு வெளியிட்டு விட்டனர். ஆனாலும் வீட்டை காலி செய்ய மறுத்து வருகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர், கோட்டாட்சியரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.-கரிகாலன்நிர்வாக பொறியாளர், கோவை மண்டல வீட்டு வசதி வாரியம்.

மூலக்கதை