உள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி தேர்தல் அவசர சட்டம் அவசியமா

சிவகங்கை : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிப்பால் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதோடு, நிதியை செலவிடுவதில் ‛கமிஷன்...கலெக் ஷன்... கரப்ஷன்'...க்கு வழிவகுக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை தவிர்த்து, கவுன்சிலர்களே தேர்வு செய்யும் மறைமுக தேர்வு முறையை அறிவித்துள்ளது. இந்த அரசின் முடிவால், அந்தந்த பகுதியில் மக்கள் சேவை,நேர்மையான தலைவர்களை மக்களே தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

மக்களின் நேரடி தேர்வால் வரும் தலைவர்கள் பாரபட்சமின்றி நேர்மையாக செயல்படுவதோடு, அரசின் நிதியை முறையாக அனைத்து கவுன்சிலர்களுக்கும் பிரித்து வழங்குவர். மறைமுக தேர்வால் வரும் தலைவர்கள் அவர் சார்ந்த கட்சியின் கவுன்சிலர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார். மக்களால் தேர்வு செய்யும் மற்ற கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளை புறக்கணித்தால், மக்களிடம் அதிருப்தி ஏற்படும்.

இது மட்டுமின்றி கவுன்சிலர்கள் வெற்றிக்கு பின், தலைவர்களை தேர்வு செய்வதில் ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதில் பிரச்னை ஏற்படக்கூடும். எனவே தலைவர் பதவிக்கு மக்களால் தேர்வு செய்யும் முறை தான் கொண்டு வர வேண்டும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மக்கள் கருத்து:

* உள்ளாட்சி தத்துவம் அடிபடும்:ஜி.ஸ்ரீவித்யாகணபதி, மாநில துணை தலைவர், மகிளா காங்., சிவகங்கை: உள்ளாட்சியில் தலைவர் பதவி மறைமுக தேர்வு கண்டிக்கத்தக்கது. மக்களால் நேரடியாக தேர்வு செய்வதின் மூலம் அவர், அரசு நிதியை முறையாக அனைத்து வார்டுக்கும் பிரித்து தருவார். நலத்திட்டங்களையும் பாரபட்சமின்றி செய்வார். அவரால் மட்டுமே மக்கள் பணியை முறையாகவும், முழுமையாகவும் செய்ய முடியும். கவுன்சிலர்களே தேர்வு செய்வதால், ஒரு தலை பட்சமாக தலைவர் செயல்படும் சூழல் வரும். இதனால் பிற கட்சி கவுன்சிலர் வார்டுகளுக்கு நலத்திட்டங்கள் செல்லாமல், உள்ளாட்சி அமைப்பின் தத்துவமே அடிபட்டு விடும்.

* குதிரை பேரம் தலைவிரித்தாடும்: என்.வேலாயுதம், விவசாயி, நாட்டரசன்கோட்டை: மக்களால் நேரடியாக தலைவரை தேர்வு செய்தால், தான் அந்தந்த பகுதியில் சிறந்தவர்கள், உண்மையானவர்களை தேர்வு செய்ய முடியும். மறைமுக தேர்வால் பணபலம், ஆள் பலம் படைத்தவர் தான் தலைவராக வரமுடியும். அவரிடம் மக்கள் தங்கள் பகுதி குறைகளை கூட தெரிவிக்க முடியாது. அவரும் மக்களுக்கு சேவை செய்வதை மறந்து, கவுன்சிலர்களுக்கு ‛குதிரைபேரத்திற்காக' செலவழித்த தொகையை எடுப்பதில் தான் குறியாக இருப்பார். இதனால் உள்ளாட்சியிலும் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் தலைவிரித்தாடும்.

* உள்ளாட்சியில் கட்சி எடுபடாது:கே.ராக்கப்பன், குடும்பதலைவர், நாட்டரசன்கோட்டை: உள்ளாட்சி நிர்வாகத்தில் கட்சி பார்த்து யாரும் ஓட்டளிப்பதில்லை. அந்தந்த வார்டு, நகரில் மக்களால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவை நோக்குடன் கூடியவரை தான் மக்கள் விரும்புவர். மக்களே நேரடியாக தலைவரை தேர்வு செய்தால் மட்டுமே, அரசு நிதியில் வளர்ச்சி பணிகளை எதிர்பார்க்க முடியும். மறைமுக தேர்தலில், அனைத்து கவுன்சிலரும் ஒரே கட்சியாக இருந்தால் மட்டுமே, அந்த உள்ளாட்சி அமைப்பிற்கு நன்மை நடக்கும். மாறாக எதிர்கட்சிகளில் இருந்து கவுன்சிலர்கள் வந்தால், தலைவர், அவர் சார்ந்த கட்சிக்கும், எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கும் ஒரு மித்த கருத்து ஏற்படாமல், உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி பெறாமல், இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

குறுக்கு வழி

கரு.ஆறுமுகம். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர், காரைக்குடி: ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மறைமுக தேர்தல் முறையை, முதலில் தி.மு.க., கொண்டு வந்தது. இம்முறையை எதிர்த்த அ.தி.மு.க.,வே அச்சம் காரணமாக மீண்டும் இதனை கையில் எடுக்கிறது. மாநகர, நகர, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பதில், கட்டாயமாக பண பேரம் நடக்கும். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும். ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள பயத்தால், குறுக்கு வழியில் ஜெயிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

விட்டதை பிடிப்பார்

ராவணன் சுரேஷ், காரைக்குடி: மக்களாட்சி என்பது மக்கள் தேர்ந்தெடுப்பதே. கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பது ஜனநாயகத்திற்கு முறையற்றது. மாநகர, நகர பேரூராட்சி தலைவர் போட்டியில், மக்கள் தங்களுக்காக உழைக்கின்ற தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், மறைமுக தேர்தல் முறையில், பணம் மட்டுமே தலைவர்களை தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கும் தலைவரும், விட்ட பணத்தை பிடிப்பதிலேயே தான் குறியாய் இருப்பார். மக்களாட்சிக்கு எதிரான இம்முறையை உடனடியாக கைவிட வேண்டும். மக்களே தலைவர்களை தேர்தெடுக்க வேண்டும். என்றார்.

ஜனநாயகம் இருக்காது:

சிதம்பரம்,முன்னாள் ராணுவ வீரர் ,தேவகோட்டை: தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். மறைமுக தேர்தலால் ரவுடியிஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் தங்களுக்கு வேண்டிய மக்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடியாது. பண பலமே கை ஓங்கும். லட்சங்கள் கைமாறி ஜனநாயகம் கொலை செய்யப்படும்.

கடத்தல் அதிகரிக்கும்:

வெங்கடாசலம்,எல்.ஐ.சி.தேவகோட்டை: நேரடி தேர்தலில் மக்களுடன் பணியாற்றிவர்களை தேர்வு செய்ய முடியும். மக்களுக்கு அறிமுகமான தவறு செய்யாதவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். தேர்தல் நடைபெறுவதே சந்தேகம் தான். நல்லவர்கள் தலைவர் பதவியை நினைத்து கூட பார்க்க முடியாது. பணம் படைத்தவர்கள், ஆட்களை கடத்தி செல்பவர்களுக்கே தலைவர் பதவி கிடைக்கும் நிலை இருப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும்.பிரபு 45,தனியார் நிறுவன ஊழியர்,மானாமதுரை.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர்,நகராட்சி தலைவர்,பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக கவுன்சிலர்களே தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு வெற்றி பெற்றவர்களை அழைத்து கொண்டு போய் குதிரை பேரம் பேசும் நிலை ஏற்படும். கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகளை தலைவரிடம் தெரிவித்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாது. தலைவர்களும் பணம் கொடுத்து தானே பதவிக்கு வந்தோம் என அவரும் தன் பங்கிற்கு உள்ளாட்சி அமைப்பில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று தான் முடிவுக்கு வருவார்.

மக்களை பாதிக்கும் தேர்தல்

மனோகர் 49, விற்பனை மேலாளர்,மானாமதுரை: மறைமுகமாக தலைவர்களை தேர்ந்தெடுக்கின்ற வேளையில் முதலில் பாதிக்கப்படுவது வாக்காளர்களாகிய பொதுமக்கள் தான்.கவுன்சிலர் பதவிக்கு நிற்பவர்கள் தலைவர்களாகி விட வேண்டும் எண்ணத்தில் மற்ற கவுன்சிலர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர எல்லா விதமான முறைகளையும் கையாண்டு அவர் தலைவர் பதவிக்கு வந்தால் பதவி காலத்தில் மக்களுக்கு நல்லது எதையும் செய்ய முடியாமல் கவுன்சிலர்களின் வருமானத்திற்கு தான் துணை நிற்க முடியும்.

புறக்கணிக்கப்படும் மக்கள் பிரச்னை

எஸ்.கார்த்திகேயன், திருப்புத்துார்.முதலில் மக்கள் உரிமையுடன் தலைவரை அணுக முடியாது. தலைவருக்கும் அனைத்து வார்டுகளுக்குமான பரந்த பார்வை ஏற்படாது. மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதை விட பலமான கவுன்சிலர்களைச் சார்ந்து செயல்படுவார். பணிகள் வார்டு வாரியாக பங்கீடு செய்யப்படும். நகருக்கான பொது பிரச்னை புறக்கணிக்கப்படும். இட ஒதுக்கீடு உள்ள தலைவர் பதவிக்கான போட்டி வெகுவாக குறைந்து விடும். இதனால் கட்சிகளுக்குத் தான் லாபமே தவிர எந்த வகையிலும் மக்களுக்கு பிரயோசனமில்லை..

சுயமாக முடிவெடுக்க முடியாது:

தே.தாஸ் செல்வக்குமார், திருப்புத்துார்: நேரடியாக மக்கள் ஓட்டு என்றால் பயம் இருக்கும். அனைத்துப் பகுதி பிரச்னைகளும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சுயமாக முடிவெடுக்க முடியும். இப்போது கவுன்சிலர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு தலைவர் செயல்பட வேண்டியிருக்கும். தலைவருக்காக உத்தேசிக்கப்பட்ட கவுன்சிலர் வேட்பாளைரை கட்சியினரே தோற்கடிக்க முயலுவார்கள். இப்படி நல்ல விஷயங்கள் எதுவுமில்லாத போது அரசியல்வாதிகளின் வசதிக்காக கொண்டு வந்து விட்டனர்.

மூலக்கதை