வடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வடகிழக்கு பருவமழை அக்.17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் மழை குறைவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவழை அக். 17ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் குறைவாகவே மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது.

இந்த பருவமழை தொடங்கியதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால், இந்தாண்டு வழக்கத்தை விட பருவமழை அளவு அதிகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. இதற்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் கியார், மகா, புல்புல் என்ற 3 புயல் திசை மாறி சென்றதே முக்கிய காரணம்.

இந்த 3 புயல்கள் வடக்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால், சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

அதே சமயம் தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 16ம் தேதி வரை தமிழகத்தில் இயல்பை காட்டிலும் குறைவாக மழை பதிவாகியுள்ளது.



குறிப்பாக, சென்னையில் 469. 9 மி. மீட்டரில் 282 மி. மீட்டர் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. அதே போன்று அரியலூரில் 325 மி. மீட்டரில் 185 மி. மீ ஆகவும், தர்மபுரியில் 244 மி. மீட்டரில் 213 மி. மீ ஆகவும், காஞ்சிபுரத்தில் 427 மி. மீட்டரில் 321மி. மீ ஆகவும், கரூரில் 205 மி. மீட்டரில் 156 மி. மீ ஆகவும், மதுரையில் 305 மி. மீட்டரில் 226 மிமீட்டர் ஆகவும், திருவள்ளூரில் 402 மி. மீட்டரில் 331 ஆகவும், விழுப்புரத்தில் 303 மி. மீட்டரில் 227 மி. மீட்டராகவும், திருவண்ணாமலை 296 மி. மீட்டராகவும், வேலூர் 242 மி. மீட்டரில் 169 மி. மீட்டர் என 24 மாவட்டங்களில் இயல்பை காட்டில் மழை குறைவாக பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை இந்த பருவமழை காரணமாக மழை பொழிவு இருக்கும்.

இந்த நிலையில் இன்னும் 44 நாட்கள் மீதமுள்ள நிலையில் சராசரி அளவு மழையாவது பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:வங்கக்கடலில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது.

இதனால் இன்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக உள்மாவட்டம், தென் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக 18(நாளை), 19(நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 20ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அதன்பின்னர், படிப்படியாக மற்ற பகுதிகளிலும் மழை அதிகரித்து காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


.

மூலக்கதை