கோவையிலும், ‘பேட்டரி பஸ்’ அறிமுகம் செய்ய போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் பேட்டரி பஸ்சினை அறிமுகம் செய்ய, போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

 சென்னையில், தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் தங்கி, பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பணிக்குச் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்வோரில் பலரும் அரசு பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவை போதுமான அளவிற்கு பராமரிக்கப்படாததால், மோசமான நிலையில் உள்ளது. 

மேலும் சாலைகளில் இந்தபஸ்கள் இயக்கப்படும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை காற்றை மாசுபடுத்தி வருகிறது. இவ்விரண்டு பிரச்னைகளையும் தடுக்கும் வகையில், அரசு ஆலோசனை செய்தது. அதன்படி சென்னையில் ‘பேட்டரி பஸ்’ சேவை கொண்டுவரலாம் என முடிவு செய்யப்பட்டது.

 விரைவில் புதிய டெக்னாலஜி கொண்ட பஸ்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் சென்னையை தொடர்ந்து கோவைக்கு முதல்கட்டமாக, 20 பேட்டரி பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டம் வகுத்து வருகின்றனர்.

சென்னையில் புதிய பஸ்கள் இயக்கத்திற்கு வரும் போதே, கோவையிலும் அறிமுகம் செய்து விடலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதற்கட்ட வேலைகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகளும், ஓட்டுனர்களும் நிம்மதியடைந்து உள்ளனர். 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சென்னை, கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. அதை குறைக்கும் வகையில் ‘பேட்டரி பஸ்’களை இயக்க முடிவு செய்து உள்ளோம்.  அதன்படி சென்னையை தொடர்ந்து கோவையில், 20 பஸ்கள் இயக்கப்படும்’’ என்றனர்.

மூலக்கதை