கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்... மீட்கப்படுமா?உத்தரவுகள் இருந்தும், 'உறங்கும்' துறை

தினமலர்  தினமலர்
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்... மீட்கப்படுமா?உத்தரவுகள் இருந்தும், உறங்கும் துறை

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பகுதிகளில், தொல்லியல் சிறப்பு வாய்ந்த வரலாற்றுச்சான்றுகள், கோவில்கள் ஏராளமாக உள்ளன.
கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், தாத்தேத்ராயர், தாண்டேஸ்வரசுவாமி கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், அர்ச்சனேஸ்வரர் கோவில் என, 50க்கும் மேற்பட்ட ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான கோவில்கள் உள்ளன.அதே போல், அறநிலையத்துறை பட்டியல் இனத்தில் சேராத சிறிய கோவில்கள், 208 உள்ளன. இதிலும், பெரும்பாலான கோவில்கள், பல நுாற்றாண்டு பழமையானவையாக உள்ளன.மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், கோவில்களே நிர்வாக மையமாக இருந்தன. அக்கோவில்களில், நித்ய பூஜைகள், விழாக்கள் சிறப்பாக நடக்கவும், அர்ச்சகர், பணியாளர்கள் தடையில்லாமல், கோவில் பணி மேற்கொள்ளும் வகையில், மானிய நிலங்களும் ஒதுக்கப்பட்டன.
இவ்வாறு, ஒவ்வொரு கோவிலுக்கும் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கோவில் நிலங்களை பராமரிக்காததால், ஆக்கிரமிப்புகளாகவும், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில் நிலங்களை கண்டறிந்து, அவற்றை மீட்கவும், கோவில் நிலங்கள் விற்பனையை தடுக்கும் வகையில், பதிவுத்துறை அலுவலத்தில், சர்வே எண் வாரிய தடையும் விதிக்கப்பட்டது.
ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பழமையான கோவில்கள் ஏராளமாக இருந்தும், கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் மாயமாகியுள்ளன. இதனால், பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகிறது.அரசு உத்தரவோடு, உயர் நீதிமன்ற உத்தரவுகளும் கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க உத்தரவிட்டும், உடுமலை பகுதியிலுள்ள கோவில் நிலங்கள் குறித்த ஆவணங்கள் கூட தயார் செய்யப்படாமல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்களின் நிலை தெரியாமல் உள்ளது
.எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் பழைய கிராம ஆவணங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிய வேண்டும். பாரபட்சமற்ற முறையில், அந்நிலங்களை மீட்க வேண்டும்.விரைவில் மீட்கும் பணி!அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மீட்கும் பணி துவங்கும்' என்றனர்.

மூலக்கதை