உர மையம் அமைக்க எதிர்ப்பு:திட்டத்தை கைவிட்ட மாநகராட்சி

தினமலர்  தினமலர்
உர மையம் அமைக்க எதிர்ப்பு:திட்டத்தை கைவிட்ட மாநகராட்சி

திருப்பூர்:பெரிச்சிபாளையம் மயானப்பகுதியில், குப்பை அரவை மையம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, 51வது வார்டு, வெள்ளியங்காடு -பெரிச்சிபாளையம் ரோட்டில், மாநகராட்சி மயானம் உள்ளது. இதன் ஒரு பகுதியில், மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை கொண்டு வந்து கொட்டி, அதை அரைத்து உரமாக்க, உர உற்பத்தி மையம் அமைக்க திட்டமிட்டு, பணி துவங்கியது.
இதற்கு ஏதுவாக அங்குள்ள சுற்றுச்சுவரை இடித்து, வாகனம் சென்று வர வசதி செய்யப்பட்டது. உர மையம் அமைக்கும் பணிக்கு, எதிர்ப்பு தெரிவித்து, 50, 51வது வார்டு மக்கள் சார்பில், 'பேனர்' வைக்கப்பட்டது; நுாற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
பணி செய்து கொண்டிருந்த 'பொக்லைன்' வாகனத்தை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த, மாநகராட்சி உதவி பொறியாளர் கவுரி சங்கர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினார்.
'உர மையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புள்ளதால், பணியை நிறுத்த விடுகிறோம்' என, அவர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். பின், மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நேற்று காலை, அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.

மூலக்கதை