மாநில எல்லையிலுள்ள கிராமங்களின் தாகம் தீருமா? ஆனைமலைக்கு புதிய குடிநீர் திட்டம்!

தினமலர்  தினமலர்
மாநில எல்லையிலுள்ள கிராமங்களின் தாகம் தீருமா? ஆனைமலைக்கு புதிய குடிநீர் திட்டம்!

ஆனைமலை:ஆனைமலை அருகே மாநில எல்லையிலுள்ள ஊராட்சிகளில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண, திவான்சாபுதுாரில் கூட்டுக்குடிநீர் திட்டம் துவங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சி, திவான்சாபுதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சுப்பேகவுண்டன்புதுார், வாழைக்கொம்புநாகூர் மற்றும் தாத்துார் ஆகிய ஏழு ஊராட்சிகளுக்கு, வேட்டைக்காரன்புதுார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஏழு ஊராட்சிகளில் மொத்தம், 27 குக்கிராமங்களில், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.குடிநீர் வடிகால் வாரியத்தின், வேட்டைக்காரன்புதுார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், மயிலாடுதுறையில் குடிநீர் பெறப்பட்டு, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்பின், தாத்துார் முதல் திவான்சாபுதுார் வரையுள்ள, ஏழு ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், திட்டத்தில் பல ஆண்டுகளாக போதிய அளவு குடிநீர் கிடைக்காததால், மக்கள் குடிநீருக்காக அலைமோதுகின்றனர். பேரூராட்சிகளுக்கு வினியோகம் செய்தது போக மீதமுள்ள தண்ணீர், ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படுவதால், கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைப்பது இல்லை.இதுபோன்ற சிக்கல்களால், ஊராட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.ஊராட்சிகளுக்கு அருகில் ஆழியாறு ஆறு சென்றாலும், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஆழியாறு ஆற்றில் திவான்சாபுதுாரில் புதிதாக கூட்டுக்குடிநீர் திட்டம் அமைத்து, ஏழு ஊராட்சிக்கு குடிநீர் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் இருந்தால், தண்ணீர் பம்ப் செய்து அனுப்பும் நேரம் குறைவதுடன், திருப்திகரமாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியும்.குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளர் திருமலைசாமி கூறுகையில், ''அடிக்கடி மின் தடை ஏற்படாமல் இருந்தால், வேட்டைக்காரன்புதுார் கூட்டுக்குடிநீர் திட்டத்திலேயே முறையாக குடிநீர் வழங்க முடியும். இந்நிலையில், புதியதாக கூட்டுக்குடிநீர் திட்டம் அமைத்தால், திருப்திகரமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியும்,'' என்றார்.

மூலக்கதை