 ரயில்வே லைனுக்கு அடியில் குடிநீர் குழாய் துண்டிப்பு: தாகத்தில் தவிக்கும் பண்ணைபட்டி மக்கள்

தினமலர்  தினமலர்

குஜிலியம்பாறை,;பண்ணைப்பட்டிக்கான குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊர் அருகே ரயில்வே லைனுக்கு மேற்புறம் போர்வெல் அமைத்துள்ளனர். அங்கிருந்து ரயில்வே லைனை கடந்து குழாயை கொண்டுவந்து, குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.கடந்த இருபது நாட்களுக்கு முன்பு ரயில்வே லைனின் குறுக்காக செல்லும் ரோட்டில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துவங்கின. இதில் குடிநீர் பைப் லைன் துண்டிக்கப்பட்டது. துண்டித்த குழாயை உடனே இணைக்காததால் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இங்குள்ள அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் இந்த குடிநீரை மட்டுமே நம்பியுள்ளன. தற்போது குடிநீர் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காவிரி குடிநீரும் முறையான விநியோகம் இல்லை. தற்போது குடிநீர் குழாய் ரயில்வே லைனை கடந்து செல்ல முறையாக அனுமதி பெற்றுள்ளனரா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.பண்ணைப்பட்டியை சேர்ந்த பெருமாள் கூறியதாவது: இருபது நாட்களாக இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி சிரமப்படுகிறோம். காவிரி குடிநீர் ஒரு சில குடங்கள் மட்டுமே வருகிறது. அரசு பள்ளிக்கு குடிநீர் வசதி அறவே இல்லை. துண்டிக்கப்பட்ட குழாயை இணைத்து முறையான குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

மூலக்கதை