எஸ்ஐ மகள் திருமணத்தை நடத்தி வைத்த எஸ்பி: நாங்குநேரியில் நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எஸ்ஐ மகள் திருமணத்தை நடத்தி வைத்த எஸ்பி: நாங்குநேரியில் நெகிழ்ச்சி

பணகுடி: நெல்லை மாவட்டம், பணகுடி குறிஞ்சி காலனியை சேர்ந்தவர் அசோகன் (57). இவர், வள்ளியூர் குற்றப்பிரிவு தனிப்படை சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஏப். 19ம் தேதி அசோகன் பணி நிமித்தமாக நெல்லையில் இருந்து வள்ளியூருக்கு பைக்கில் சென்றார். அப்போது நாங்குநேரி பைபாஸ் பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஏப். 24ம் தேதி இறந்தார். அசோகனின் மூத்த மகள் அன்பரசிக்கும், நாகர்கோவில் இறச்சகுளத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிகாரியான மகேசுக்கும், அசோகன் விபத்தில் சிக்குவதற்கு சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மே 10ம் தேதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அசோகன் விபத்தில் பலியானதால், அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.

இதனால் மே 10ம் தேதி திருமணம் நடக்கவில்லை. இதையடுத்து அசோகன் குடும்பத்தினரிடம் பேசிய எஸ்பி அருண்சக்திகுமார், ஜூன் 14ம் தேதி திருமணம் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார். தந்தையின் ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக அன்பரசிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்று (14ம் தேதி) பணகுடியில் உள்ள திருமண மண்டபத்தில் அன்பரசி - மகேஷ் திருமணம் நடந்தது.

காலையிலேயே விழாவிற்கு சென்ற எஸ்பி அருண் சக்திகுமார் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

.

மூலக்கதை