சிறு தானியங்களால் காக்கப்பட்ட சிட்டுக்குருவி!

தினமலர்  தினமலர்
சிறு தானியங்களால் காக்கப்பட்ட சிட்டுக்குருவி!

உடுமலை : சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில், சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிப்பது அவசியமானது என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.சுற்றுச்சூழலை பாதுகாத்து புவி வெப்பமயமாவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதையொட்டி, சூழலில் முக்கிய பங்கு வகிக்கும், பறவைகள், விலங்குகள் பாதுகாப்பிலும், அவை குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய விழிப்புணர்வில், சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு முக்கிய இடம் பிடித்துள்ளது.உடுமலை பகுதி கிராமங்களிலுள்ள, தொட்டிக்கட்டு வீடுகளில், சாதாரணமாக உலா வந்து, குடியிருப்புகளில், உள்ள பொதுக்கிணறுகளில், நுாற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வலம் வந்தன.இதற்கு, அக்காலகட்டத்தில், விளைநிலங்களில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்ட சிறுதானியங்கள் முக்கிய காரணமாகும். சோளம், கம்பு என சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் சிறுதானியங்கள் அப்போது, பல ஆயிரம் ஏக்கரில், பயிரிடப்பட்டு வந்தது.காலப்போக்கில், சிறுதானிய சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து, சிட்டுக்குருவிகளும், அரிதாக தென்பட துவங்கியது.
நகரங்களில், சிட்டுக்குருவிகள், அழிவுக்கு பல காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை தடுக்க, சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, வீடுகளின் முன்புறத்தில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டும் அமைப்பை ஏற்படுத்துதல், காலை நேரத்தில் உணவளித்தல் போன்ற பணிகளை பல தன்னார்வ அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.அதன்படி கடந்த, 2010 ம் ஆண்டு முதல், மார்ச் 20 ம் தேதி சிட்டுக்குருவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதரை சுற்றியுள்ள உயிரியல் பல்வகைத்தன்மையை பாதுகாக்கவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.இயற்கை வேளாண்மை, சிறு தானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், சிட்டுக்குருவிகளும், கிராமங்களில் பரவலாக தென்பட துவங்கியுள்ளன.இதில், சிறு தானியங்கள் சாகுபடியில், அதிக பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் தவிர்த்தலும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களுக்கு, மக்கள் ஆதரவளிப்பதும் கூட சிட்டுக்குருவிகளை பாதுகாக்க உதவும்.இது குறித்து, மக்கள் உலக சிட்டுக்குருவி தினத்தில் யோசிப்பது மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

மூலக்கதை