தேர்தல் நாளில் அவிநாசி தேரோட்டத்தால்...ஓட்டுப்பதிவு பாதிக்கும்! டூஅனைத்து கட்சியினர் பரபரப்பு புகார்

தினமலர்  தினமலர்
தேர்தல் நாளில் அவிநாசி தேரோட்டத்தால்...ஓட்டுப்பதிவு பாதிக்கும்! டூஅனைத்து கட்சியினர் பரபரப்பு புகார்

அவிநாசி:'அவிநாசி கோவில் தேரோட்ட நாளில், தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், பக்தர்கள் வசதி கருதி சிறப்பு ஏற்பாடு செய்ய வேண் டும்' என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
அவிநாசி தாலுகா அலுவலகத்தில், நேற்று அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல், தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், அவிநாசி இன்ஸ்பெக்டர் இளங்கோ உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது;தேர்தல் நன்னடத்தை விதியை அரசியல் கட்சியினர் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். சுவர் விளம்பரம் செய்யக்கூடாது; வாகனங்களில் முகப்பில் கட்சிக்கொடி கட்டக்கூடாது. சட்டம் ஒழுங்குப்பிரச்னை ஏற்படாத வகையில், போலீசாருக்கு, அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.
கட்சியினர் கூறியதாவது;ஓட்டுப்பதிவு நாளில், அவிநாசி கோவில் தேரோட்டம் வருகிறது; உள்ளூர் மட்டுமன்றி, வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், இக்கோவில் விழாவுக்கு வருவர் என்பதால், ஓட்டுப்பதிவு பாதிக்கும். எனவே, ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகப்படுத்துவது என்பது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தேர்தல் சார்ந்து எவ்வித சட்டம் ஒழுங்குப்பிரச்னையும் ஏற்படாதவாறு பணியாற்றுவதாக, கட்சியினர் உறுதியளித்தனர்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகையில், ''கோவில் விழா குறித்த அரசியல் கட்சியினரின் யோசனை, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.கூட்டத்தில், பழனிசாமி, அவிநாசியப்பன் (தி.மு.க.,) ராமசாமி, வேலுசாமி (அ.தி.மு.க.,) சாய் கண்ணன் (காங்.,) பழனிசாமி, வெங்கடாச்சலம் (மா.கம்யூ.,) உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.பா.ஜ., வி.சி., கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர், கூட்டம் முடிந்து சில நிமிடம் கழித்தே வந்து, திரும்பிச் சென்றனர்.

மூலக்கதை