பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணிக்கு கேள்வி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணிக்கு கேள்வி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?

திருச்சி: ‘அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?’ என, தமிழக காங்கிரசின் செயல் தலைவரும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணுபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான திருச்சி மண்டல ஆயத்தக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் வரவேற்றார். செயல் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.

புல்வாமா வெடி குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் 44 பேருக்கும் மற்றும் காங்கிரஸ் பெண் உறுப்பினர் மறைவுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தமிழக காங்கிரசின் செயல் தலைவரும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணுபிரசாத் பேசியதாவது: 10 கோரிக்கைகளை வைத்து அதிமுகவுடன் கூட்டணி என்று ராமதாஸ் கூறுகிறார். 11வது கோரிக்கை என்னவென மக்களுக்கு தெரியும்.

ராமதாஸ் எனக்கு மாமா தான். மானங்கெட்ட எவனாவது திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பானா எனக்ேகட்டுவிட்டு, இப்போது எந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இது மானங்கெட்டத்தனமாக தெரியவில்லையா?. வெட்கம் கெட்டு, மானம் கெட்டு கூட்டணி அமைத்துள்ளனர்.

கூட்டணி பேரம் நடந்துள்ளது. மாவீரன் குருவை சிறையில் அடைத்ததால் தான் அவர் இறந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

குருவை சிறையில் அடைத்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார் ராமதாஸ். குருவின் ஆன்மா கூட அவர்களை மன்னிக்காது.

ஜாதியை சொல்லிக்கொண்டு ஓட்டுக்கேட்க வருவார்கள். மக்களே அவர்களை விடாதீர்கள்.

கூட்டணிக்காக ராமதாஸ், சமுதாயத்தை அடகு வைத்துவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணியின் மனைவி சவுமியா, விஷ்ணுபிரசாத்தின் உடன் பிறந்த சகோதரி ஆவார். சவுமியாவை, ராஜ்யசபா எம்பியாக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ள நிலையில், விஷ்ணுபிரசாத் ராமதாசை விமர்சித்து பேசியிருப்பது அன்புமணி குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர், வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், பொருளாளர் ராஜா நசீர், காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி வேலுச்சாமி, சுஜாதா உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய்தத் பேசியதாவது: மோசமான ஆட்சியாளர்களின் கைகளில் மக்கள் சிக்கியுள்ளனர். மோடி ஆட்சியை விரட்டியடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மோசமான கூட்டணியை ஏற்படுத்தி உள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்று வரை தங்களை விமர்சித்த சிவசேனாவுடனும், தமிழகத்தில் ஊழல் கட்சி என விமர்சித்து வந்த அதிமுகவுடனும் பாஜ கூட்டணி அமைத்துள்ளது.

பாமக ராமதாஸ் நாள்தோறும் ஊழல் கட்சி என அதிமுகவை விமர்சித்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினார்.

ஊழல் அமைச்சர்கள் பட்டியலை கவர்னரிடம் வழங்க சென்றார். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றார்.

இப்போது கூட்டணி அமைத்துள்ளார். அடிப்படை கொள்கை, கோட்பாடுகள் இல்லாத கூட்டணி.

பயத்தின் காரணமாக அமைந்த கூட்டணி அது. பாஜ அமலாக்கத்துறையை காட்டி மிரட்டி மாநில கட்சிகளை பணிய வைத்து கூட்டணி அமைக்கிறது.

நாம் அமைத்திருப்பது வெற்றிக்கூட்டணி. தமிழகத்தில் 40ம் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை