உள்ளாட்சிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ரோடு, மக்கள் நடமாடும் பகுதியில் கழிவுநீர் கொட்டுவது தொடர்கிறது

தினமலர்  தினமலர்

காரியாபட்டி:அழுகிய காய்கறி, பழங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரோட்டில் கொட்டுதல், ஓட்டல், டீக்கடைகளில் உள்ள கழிவு நீரை வாளியில் பிடித்து வந்து ஊற்றுதல் போன்ற செயல்களால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் வைக்கப்படும் தொட்டிகளில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சிகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், ரோடு ஓரங்களில் கடைகள் அதிகரித்து வருகின்றன.
இதில் காய்கறி, பழக்கடை, ஓட்டல், டீக்கடைகளில் மிஞ்சும் பொருட்கள், அழுகிய காய்கறி, பழங்களை அங்குள்ள குப்பை தொட்டிகளில்கொட்டுவது இல்லை. மக்கள் நடமாட்டம் அதிகம் என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல், அதனால் ஏற்படும் துர்நாற்றம், கொசு, ஈ க்களால் ஏற்படும் தொற்றுநோய் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் இப்பிரச்னை பெரிதாக உருவெடுத்து வருகிறது.
ரோடு சேதம்
பெரும்பாலான ஓட்டல், டீக்கடைகளில் வெளியாகும் கழிவு நீரை வாளியில் பிடித்து, பஸ் ஸ்டாண்ட் அல்லது ரோட்டில் கொட்டுகின்றனர். மக்கள் இதனை மிதித்து நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதில் பழத்தோல் இருந்தால் வழுக்கி கீழே விழுகின்றனர். இதில் ஈ மொய்த்து, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது. பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. செருப்பு அணியாமல் செல்லும் சிலருக்கு காலில் அரிப்பு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்பதால் ரோடு சேதமடைய இந்த கழிவுநீர் காரணமாக உள்ளது. இது தொடர்வதால் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது.கண்காணிப்பு தேவைதுாய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. அதனை பலர் கண்டுகொள்ளாமல் செயல்படுகின்றனர்.
உணவு பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களாக இருப்பதால் சுற்றுப்புற துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதிகாரிகளும் அவ்வப்போது கண் காணிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய இடங்களில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். தொட்டிகளில் குப்பை கொட்ட கட்டாயப்படுத்தவேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கால்களில் புண்
ரோட்டோரத்தில் கடை வைக்க, அதிக முன்பணம் கொடுத்து வாடகைக்கு பிடிக்கின்றனர். சிறிய கடைகளாக இருந்தாலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்தால் போதும் என நினைக்கின்றனர். கழிவு பொருட்களை வாகனங்கள் செல்லும் ரோட்டில் கொட்டுகின்றனர். அதில் மக்களும் நடமாட வேண்டிய நிலை இருப்பதால், மிதித்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன் கால்களில் புண் உள்ளிட்ட வியாதிகள் உண்டாக வாய்ப்புள்ளது. கழிவு நீரை வாறுகாலிலோ அல்லது ஊருக்கு ஒதுக்கப்புறத்திலோகொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கணேசன், சமூக ஆர்வலர், காரியாபட்டி.

மூலக்கதை