இரு அணிகளின் தலைவர்களும் நீண்ட நேரம் ஆலோசனை எடப்பாடி - ஓபிஎஸ் இணைவதில் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரு அணிகளின் தலைவர்களும் நீண்ட நேரம் ஆலோசனை எடப்பாடி  ஓபிஎஸ் இணைவதில் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: எடப்பாடி-ஓபிஎஸ் அணியினர் இணைவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் தாமதம் ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

அதிமுகவில் பிரிந்து செயல்படும், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியினரும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் நேற்று இரவு 7. 30 மணிக்கு ஜெயலலிதா சமாதியில் சந்தித்து அஞ்சலி செலுத்திய பின்னர் இணைப்பு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

 இதையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதா சமாதியில் குவிந்தனர்.

சமாதிக்கு சென்று விட்டு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் வருவதாக கூறப்பட்டது. இதற்கு முன் ஏற்பாடாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

ராட்சத மின் விளக்குகளும் அங்கு பொருத்தப்பட்டன. சமாதி மற்றும் கட்சி அலுவலகத்தில் கொட்டும் மழையில் தொண்டர்கள் காத்திருந்தனர்.

 இந்நிலையில் இரண்டு அணி தலைவர்களும் தனித்தனியாக நடத்திய பேச்சுவார்த்தை நேற்று இரவு 11 மணி வரையும் நீடித்ததால், இணைப்பு முயற்சி நேற்று இறுதிக்கட்டத்தை எட்டாமல் கைவிடப்பட்டது.

முன்னதாக, சமாதியில் முதல்வர் எடப்பாடி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் வைப்பதற்கான பூங்கொத்து வாங்கி தயாராக வைக்கப்பட்டிருந்தது. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளும் கடற்கரை சாலை வழியாக செல்ல போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய ஏராளமான போக்குவரத்து போலீசாரும் நள்ளிரவு 11 மணி வரை நிறுத்தப்பட்டு இருந்தனர்.



நள்ளிரவு 11 மணிக்கு மேல்தான், இனி இரண்டு அணி தலைவர்களும் வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால் போலீசார் வீட்டுக்கு திரும்பினர். நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கிய பரபரப்பு நள்ளிரவு 11 மணி வரை நீடித்தாலும், இணைப்பு முயற்சி நேற்று தோல்வியிலேயே முடிந்தது.

ஆனாலும், இன்று மீண்டும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் விழாவுக்கு காலையிலேயே சென்று விட்டார்.

இதனால் இன்றைய தினம் இரண்டு அணிகள் இணைய வாய்ப்பு இல்லை.

 நாளை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. இனி, நாளை மறுதினம் திங்கட்கிழமை தான் இரண்டு அணிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று இணைப்பு முயற்சியின் இறுதி கட்டத்துக்கு வந்தும், கடைசி நேரம் ஏன் சிக்கல் ஏற்பட்டது என்பது குறித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இரண்டு அணிகளும் இணைய ஓபிஎஸ் 2 கோரிக்கைகள் வைத்தார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய பாரதிய ஜனதா அரசின் முயற்சியால் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி சம்மதம் தெரிவித்தார்.

அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். அதன்படி நேற்று இரவு 7. 30 மணிக்கு ஜெயலலிதா சமாதியில் இரண்டு அணிகளும் சந்தித்து இணைவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

அதன்படி, எடப்பாடி அணியுடன் இணையும்போது எங்கள் தரப்பினருக்கு (ஓபிஎஸ் அணிக்கு) கட்சியிலும், ஆட்சியிலும் என்னென்ன பதவிகள் கிடைக்கும் என்பது குறித்து நேற்று மாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு வரை விவாதிக்கப்பட்டது.

அதன்படி ஓ. பன்னீர்செல்வம், செம்மலை, மாபா. பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எடப்பாடி அணியினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், எங்கள் அணியில் உள்ள மூத்த தலைவர்களில் பலர் தற்போது எம்எல்ஏக்களாக இல்லை. அவர்கள்தான் ஆரம்பத்தில் இருந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்து வந்தவர்கள்.

அவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கே. பி. முனுசாமி உள்ளிட்டவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும்.



மேலும், கட்சியில் என்னென்ன பதவிகள் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக எடப்பாடி அணியினர் இப்போதே தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பிரச்னையால்தான் இணைவதில் நேற்று இழுபறி ஏற்பட்டது.

ஓபிஎஸ் எம்பி, எம்எல்ஏக்களிடம் பேசும்போது, இணைவதுதான் நமக்கு நல்லது. சசிகலாவை விரட்ட இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்கு உரிய மரியாதை அங்கு கிடைக்கும். அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன் என்றார்.

இதனால் எம்எல்ஏக்கள் பலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையின்போது, கே. பி. முனுசாமிக்கும், மாபா. பாண்டியராஜனுக்கும் இடையே தகராறே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முனுசாமிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும்.

அதேபோன்று கட்சியின் வழிகாட்டு குழுவுக்கு ஓபிஎஸ் தலைவராக இருப்பார். அந்த குழுவில் அதிக எண்ணிக்கையில் ஓபிஎஸ் அணியினரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்.



மாநிலங்களவை எம்பி பதவி வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைக்கப்பட்டது. ஆனால், இதை எல்லாம் தற்போது பேச முடியாது என்று ஓபிஎஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

3 அமைச்சர் பதவியும், நல்ல இலாக்காவும் கிடைக்கும். கட்சியில் ஏற்கனவே அவரவர் வகித்த பதவி எப்படியே கிடைக்கும்.

அதைத் தவிர நம்முடைய ஆதரவாளர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை என்னால் முடிந்த அளவு செய்வேன். என்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன் என்று ஓபிஎஸ் உறுதியளித்தார்.

ஆனால், வந்தவர்கள் பலரும் எதிர்பார்ப்போடு வந்ததால் அவர்களை ஓபிஎஸ்சால் சமாதானப்படுத்த முடியவில்லை.

இதனால் முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

ஆனால் கடைசியாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. அவர் எடப்பாடி அணியுடன் இணைப்பு குறித்து இன்றும், நாளையும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் ஓ. பி. எஸ் ஆதரவாளர்கள்.


இணைப்புக்கு நான் தடையா? கே. பி. முனுசாமி பேட்டி

தொண்டர்களின் நலனுக்காக அழுத்தம் மட்டுமே கொடுத்தோம். ஆனால் முடிவு எடுக்கும் அதிகாரம் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வழங்கியிருப்பதாக கே. பி. முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக ஓ. பி. எஸ். அணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான கே. பி. முனுசாமி சென்னையில் இன்று காலை அளித்த பேட்டி: அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அணிகள் இணைப்பு தாமதத்திற்கு நான் தான் காரணம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

எந்த அடிப்படையில் நான் காரணம் என்று கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை.

அப்படி யார் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கடுமையாக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

ஓ. பி. எஸ். என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன்படி செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை