கிரெடிட் கார்டு உரசும் முன் கவனமுங்க! காத்திருக்கிறான் 'ஸ்கிம்மர்!'

தினமலர்  தினமலர்
கிரெடிட் கார்டு உரசும் முன் கவனமுங்க! காத்திருக்கிறான் ஸ்கிம்மர்!

கோவை:கோவையில், ஏ.டி.எம்., கார்டு ரகசியங்களை திருட பயன்படுத்தப்படும், 'ஸ்கிம்மர்' இயந்திரங்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; பெட்ரோல் பங்க், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு,'சைபர் க்ரைம்' போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தில், பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள், 'ஸ்கிம்மர்' இயந்திரம் பொருத்தப்பட்டதை கண்டுபிடித்தனர். இது குறித்து சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் 'ஸ்கிம்மர்' இயந்திரத்தை பறிமுதல் செய்து, அதனை பொருத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன், காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் 'ஸ்கிம்மர்' இயந்திரம் மூலம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த, பங்க் ஊழியர்கள் இருவர், கைது செய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
இதன்மூலம் கோவையில் உள்ள பெட்ரோல் பங்க், ஏ.டி.எம்., மையங்கள், ஓட்டல்களில் 'ஸ்கிம்மர்' இயந்திரங்கள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் 'டெபிட்', கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது, மிகவும் கவனமாக இருக்குமாறு, போலீசார் எச்சரித்துள்ளனர்.
மாநகர 'சைபர் க்ரைம்' போலீசார் கூறியதாவது:ஓட்டல், சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில், பணம் செலுத்த, டெபிட், கிரெடிட் கார்டுகளை, 'Electronic Data Capture' என்ற இயந்திரத்தில் 'ஸ்வைப்' செய்வார்கள். அப்போது கார்டில் உள்ள தகவல்கள், வங்கிக்கு சென்று பரிவர்த்தனை துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.இதேபோன்று கிரெடிட், டெபிட் கார்டில் உள்ள தகவல்களை திருட, பயன்படுத்தும் இயந்திரம்தான் 'ஸ்கிம்மர்'. வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டை ஓட்டல், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில், ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு கவனிக்காமல் இருந்தால், அதனை சிறிய அளவில் இருக்கும், 'ஸ்கிம்மர்' இயந்திரத்தில் தேய்த்து விடுவார்கள்.
இதன் மூலம், கார்டில் உள்ள தகவல்களை 'ஸ்கிம்மர்' இயந்திரம் பிரதி எடுத்து வைத்து கொள்ளும். ஒரு 'ஸ்கிம்மர்' கருவியில், 100 கார்டுகளின் தகவல்களை பதிந்து வைத்து கொள்ள முடியும். பின், திருடப்பட்ட தகவல்களை வைத்து, போலி (குளோனிங்)கார்டை தயாரிப்பார்கள்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை, ரகசிய கேமரா பயன்படுத்தியோ, 'ஹேக்' செய்தோ எடுத்து விடுகின்றனர். இதன்மூலம் போலி கார்டை தயாரித்து, வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள். பெட்ரோல் பங்க், ஓட்டல்களில் உள்ள ஊழியர்களுக்கு பணம் கொடுத்து, அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை திருடி வருகின்றனர்.இவர்கள் தயாரிக்கும் போலி கார்டு மூலம் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க முடியாமல் போனால், 'ஆன்லைன்' வர்த்தகம் மூலம் மோசடி செய்கின்றனர். கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால், ஓட்டல், பெட்ரோல் பங்க், ஏ.டி.எம்.,களில் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
'சிம்' கார்டிலும் கவனம்!
துடியலுாரை சேர்ந்த இன்ஜி., கம்பெனி உரிமையாளர் ஒருவரின் ஆவணங்களை போலியாக தயாரித்து, அதன்மூலம் அவரது மொபைல்போன் 'சிம்'மை மோசடியாக பெற்ற கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து, 6.75 லட்சம் ரூபாயை சுருட்டியது.
இதனால், யாருக்காவது மொபைல்போன் எண் சிக்னல் கிடைக்கவில்லை என்றால் உஷாராக இருக்க வேண்டும். 'சிம்' சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக குறிப்பிட்ட நிறுவனத்தில் விசாரித்து, புகார் அளிக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை