வடக்கில் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்க டக்ளஸ் கோரிக்கை!

என் தமிழ்  என் தமிழ்
வடக்கில் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்க டக்ளஸ் கோரிக்கை!

வடமாகாணத்தில் மேலும் பல பிரதே சபைகளின் உருவாக்கம் மற்றும் பிரதேச சபைகளின் தரம் உயர்த்தல் தொடர்பிலான கோரிக்கையை, ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில், நேற்று இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரையாடலின் போதே, அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்து அறிக்கையொன்றையும் கையளித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உள்ளூராட்சி சபைகள் சம்பந்தமாக சில முக்கியமான விடயங்களை இங்கு கூற விரும்புகின்றேன். நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் சில பிரதேச சபைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதையிட்டு முதலில் மகிழ்ச்சியடைகின்றேன். இதேவேளை, வடமாகாணத்தில் மேலும் பல பிரதேச சபைகளை உருவாக்க வேண்டும் மற்றும் பிரதேச சபைகளின் தரம் உயர்த்த வேண்டும்.

“மருதங்கேணி (யாழ். மாவட்டம்), கண்டாவளை (கிளிநொச்சி மாவட்டம்), ஒட்டிசுட்டான் (முல்லைத்தீவு மாவட்டம்), மடு (மன்னார் மாவட்டம்) ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபை இல்லாத காரணத்தால் அங்கே உள்ளூராட்சி சபைச் சேவைகள் – குப்பை அகற்றல், சந்தைப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு போன்ற சேவைகள் செயலற்றுக் காணப்படுகின்றன.

இந்த நான்கு பிரதேசங்களும் மிகப் பெரியவை மற்றும் மிகவும் பின்தங்கியவையாகும். இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மானிப்பாய், சுன்னாகம். சங்கானை, நெல்லியடி ஆகிய நகர்களுக்கு நகரசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

“கிளிநொச்சி, மிகவும் பெரிய நகர். இது சுமார் 4 கிலோமீற்றர் தூரம் பரந்தன் முதல் முறிகண்டிவரை பரந்து உள்ளது. இது கரைச்சி பிரதேச சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சபையால் கிளிநொச்சி நகரத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் உள்ளது. மேலும், கரைச்சி பிரதேச சபை கண்டாவளை பிரதேச செயலகத்தையும் நிர்வகிக்க வேண்டி உள்ளது. அதாவது, 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி நகர சபையாகவே இயங்கி வந்தது. மேலும், கிளிநொச்சி நகர்தான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக நகர். இது விவசாய, வர்த்தக, நிதி மற்றும் கல்வித் துறைகளுக்கு வடமாகாணத்தில் உள்ள ஒரு மையமாகும்.

முல்லைத்தீவு நகரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக நகராகும். இதுவும் 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் நகரசபை அந்தஸ்தை அனுபவித்தது. இதேபோல் மானிப்பாய், சுன்னாகம், சங்கானை, நெல்லியடி நகர்களும் 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் நகரசபை அந்தஸ்தைக் கொண்டிருந்தன. இவையாவும் இன்று நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.

இங்கெல்லாம் நகர சபை நிர்வாகம் அமையாததால் நகரங்களின் தேவைகளும் சேவைகளும் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றது. எனவே, இங்கு மேலே கூறப்பட்ட பிரதேச சபைகளை வரவுள்ள தேர்தலுக்கு முன் தரம் உயர்த்தி நகர சபைகளாக மேம்படுத்துமாறு, தங்களை மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

யாழ் நகரமே வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு மாநகர சபையாகும். ஆதலால் இத்தருணத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் வவுனியா நகரை மாநகர சபையாக தரம் உயர்த்த வேண்டுகின்றேன். இத்தரமுயர்த்தல் இந்நகரை மேலும் வளர்ச்சியடையச் செய்யும். அங்குள்ள மக்களும் மிக உயர்ந்த சேவைகளைப் பெறமுடியும்.

இத்தருணத்தில் நாட்டின் மற்றைய பிரதேசங்களைப் பற்றிப் பேசாவிடின் நான் எனது கடமையில் இருந்து தவறியவன் ஆவேன். கிழக்கு மாகாணத்தில் மாகாணத் தலைநகரான திருகோணமலையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். மேலும், செங்கல்லடி, களவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா போன்ற பிரதேச சபைகளும் நகர சபைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று-மத்தி, கோரளைப்பற்று (வாழைச் சேனை) ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இங்கே பிரதேச சபைகள் இன்மையால் உள்ளூராட்சி சேவைகள் மிகவும் முடங்கிக் காணப்படுகின்றன. தயவுசெய்து இவைகளுக்கும் பிரதேச சபைகள் அமைக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

கல்முனை நகரில் சாய்ந்தமருது பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வேளையில் அங்குள்ள தமிழ்ப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் துன்பங்களும் நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும், இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும் பாதிக்கப்பட்டுள்ளது.

“தாங்கள் நாட்டில் சமூக, இன நல்லிணக்கத்துக்காக குரல் கொடுத்து அதை பலப்படுத்தி வருகிறீர்கள். ஆதலால் இந்த கல்முனை விடயத்தை விரைவில் தாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு தீர்த்து வைக்கவேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி விடயங்களைக் கூறியுள்ளேன். தற்போது தெற்கில், மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்தைப் பிரதேச சபையாக்குமாறும் மற்றும் அக்குரஸ, தெனியாய, அக்மண போன்ற நகர்களை நகர சபையாக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன். உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம், தரமுயர்த்தல் சம்பந்தமாக ஐம்பதுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் முடிவு காணப்படாமல் நீண்ட காலமாகத் உள்ளூராட்சி அமைச்சிடம் உள்ளதாக அறிகின்றேன்.

நான் அறிந்தவரையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் உள்ளூராட்சி சபைகள் அமைக்கவும், தரம் உயர்த்தவும் தகுதிகள் யாவை என வரையறுத்துள்ளதாக அறிகிறேன். ஆனால், இக்குழு மிகவும் பின்தங்கிய, மக்கள் அடர்த்தி குன்றிய பிரதேசங்களான வடமத்திய மாகாணம், வடமாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் போன்றவற்றின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளனர். மேலும், இக்குழுவில் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் எதுவும் கிடையாது. இவர்களின் பரிந்துரைகள் மேற்கூறப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது.

“ஆகவே, மேலே நான் கோரி இருக்கும் விடயங்களை விரைவில் வர இருக்கும் தேர்தலுக்கு முன் தாங்கள் கருத்தில் எடுத்துக்கொண்டு, அவற்றை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை