சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு! – மகிந்தவுக்கும் அழைப்பு

என் தமிழ்  என் தமிழ்
சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு! – மகிந்தவுக்கும் அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேaனவின் தலைமையில் எதிர்வரும் 03 அம் திகதி இடம்பெறவுள்ள விசேட மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள அனைவருக்கும் நேற்று அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மாநாட்டில் கண்டிப்பாகக் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதாக கட்சியின் முக்கிய அமைச்சரொருவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை எந்த நிபந்தனையும் அற்ற நிலையில் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறச் செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, அக்கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூடி, கூட்டு எதிர்க்கட்சி தீர்மானமொன்றை எடுக்குமென அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அந்த சந்திப்புக்கு பின்னரே ஜனாதிபதி தலைமையிலான மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீல. சு. கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா உறுதியாகத் தெரிவித்தார்.

மூன்றாம் திகதி இடம்பெறும் மேற்படி கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டு எதிர்க் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய அரசியலமைப்பு திருத்தம் உட்பட கூட்டு எதிர்க்கட்சி சில நிபந்தனைகளை ஸ்ரீல. சு. கட்சிக்கு முன்வைத்துள்ளது. அவை நிறைவேறாத பட்சத்தில் எந்தவொரு கூட்டத்திற்கும் ஆதரவளிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை