பெரிய அளவில் தீ விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முடிந்தது : பட்டாசு வெடித்ததில் 26 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெரிய அளவில் தீ விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முடிந்தது : பட்டாசு வெடித்ததில் 26 பேர் காயம்

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிய அளவில் தீ விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் முடிந்தது. பட்டாசு வெடித்ததில் 26 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில், பொதுமக்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று, ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து சிறப்பாக தீபாவளியை கொண்டாடினர். குறிப்பாக தீபாவளி என்றாலே பட்டாசுதான் முக்கியத்துவம் பெறும்.

இதன்படி பட்டாசு விற்பனையும் அமோகமாக இருந்தது. சென்னையில் தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக லேசான மழை இருந்ததால் பட்டாசு வியாபாரிகளும், பொதுமக்களும் தீபாவளிக்கு மழை பெய்தால் பட்டாசு விற்பனை இருக்காது, பட்டாசு வெடிக்க முடியாது என்று கவலை அடைந்தனர்.

ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினமும் நேற்றும் மழை இல்லாமல் லேசான மேகமூட்டம் மட்டுமே இருந்தது. இதனால், பட்டாசு விற்பனை அதிகமாக இருந்தது.

பொதுமக்களும் பட்டாசுகள் வெடித்து நேற்று தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு வெடிக்க ஆரம்பித்தவர்கள் நேற்று நள்ளிரவு 11 மணி வரை வெடித்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் வெடிக்கும் ராக்கெட் வெடிகள் இந்த தீபாவளிக்கு அதிகளவில் வெடிக்கப்பட்டதால், இரவு முழுவதும் வானத்தில் பட்டாசு வெளிச்சமாகவே காட்சி அளித்தது. இதுபோன்ற வெடிகளால், காற்று மாசும் அதிகளவில் இருந்தது.

வழக்கமாக சென்னையில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு விபத்து அதிகளவில் நடைபெறும். இதை சமாளிக்க தீயணைப்பு வீரர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள்.

ஆனால், நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடியால் பெரிய அளவில் எந்த இடத்திலும் தீ விபத்து நடைபெறவில்லை. அதேநேரம் பட்டாசு வெடித்ததால் 26 பேர் தீக்காயம் அடைந்தனர்.

இதில் 17 பேர் லேசான தீக்காயம் அடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உடனடியாக வீடு திரும்பினர். 9 பேர் மட்டுமே அதிகளவு தீக்காயத்துடன் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி என்றால் பட்டாசு வெடிப்பது மற்றும் ராக்கெட் வெடிகளால் குடிசைகள் தீப்பற்றி எரியும் சம்பவம் அதிகளவில் இருக்கும்.

ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு குடிசை உள்ளிட்ட எந்த பகுதியிலும் தீ விபத்து இல்லால் தீபாவளி முடிந்துள்ளது.

இதனால் தீயணைப்பு வீரர்களும் நிம்மதி அடைந்தனர்’  என்றார்.

.

மூலக்கதை