தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை எட்டும்: டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை எட்டும்: டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்ப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தாலும், தீபாவளி பண்டிகையின்போது ரூ. 500 கோடிக்கு மதுபான விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூலம், சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 65 முதல் ரூ. 70 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

வார விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை விற்பனையாகும். கடந்த 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 மதுபான கடைகளை மூடினார்.

அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 கடைகளை மூடினார். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் 3,321 மதுபான கடைகள் மூடப்பட்டன.

இதனால், மதுபான விற்பனை பெருமளவில் பாதிக்கும் எனஎதிர்ப்பார்க்கப்பட்டது. இதன்படி ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் மது விற்பனை பாதித்தது.

மதுபான கடைகள் குறைந்த போதிலும் ஜூன் மாத இறுதிக்குள் வழக்கமான விற்பனையை தொட்டது. ஜூலை மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு வழக்கம் போல் 47 லட்சம் மதுபான பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டது.

மூடப்பட்ட 4,321 கடைகளுக்கு பதில் புதிதாக ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

கடைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மதுபான விற்பனை வழங்கம்போல் நாள் ஓன்றுக்கு சராசரியாக ரூ. 65 கோடியில் இருந்து ரூ. 70 கோடி விற்பனையானது.

கொள்முதலும் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 47 லட்சம் பெட்டிகள் முதல் 50 லட்சம் பெட்டிகளாக இருந்தது. தமிழகத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் கூடுதலான மதுபான கடைகள் இருப்பதால், 6 ஆயிரம் கடைகள் இருந்த போது நடைபெற்ற விற்பனை நடைபெறுமா அல்லது விற்பனை குறையுமா என்ற குழப்பம் டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் நிலவி வந்தது.

இருந்தாலும் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மது விலையை தமிழக அரசு திடீரென உயர்த்தியது.

இதனாலும் விற்பனை பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எந்த கடையிலும் விற்பனை சிறிதளவும் குறையவில்லை.

மாறாக கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிகிறது. இதை ஆய்வு செய்த அதிகாரிகள் ரூ. 700 கோடி மதிப்பிலான மதுபானங்களை அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

எனவே, தீபாவளி பண்டிகையின் விடுமுறை நாட்களில் சுமார் ரூ. 500 கோடி அளவுக்கு மதுபான விற்பனை இருக்கும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை