மக்களின் சாபத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தப்ப முடியாது!

என் தமிழ்  என் தமிழ்
மக்களின் சாபத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தப்ப முடியாது!

தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்கு பறிகொடுத்த மக்களின் ஓலம் தான் எதிரொலிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்களின் சாபத்திலிருந்து முதல்வர் தப்ப முடியாது என்று கொந்தளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நிகழ்கால வாரிசுகள் தமிழக பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்தான். டெங்குக் காய்ச்சலுக்கு மணிக்கு ஓர் உயிர் பிரிந்துகொண்டிருக்கும் நிலையில், முதல்வரும், அமைச்சரும் புதுக்கோட்டையில் கொண்டாட்டங்களில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் டெங்குவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. டெங்குவுக்கு வாரத்துக்கு ஒருவர் உயிரிழந்து கொண்டிருந்தபோது, அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 பேர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 18 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், இதுகுறித்த கவலையோ, மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையோ இல்லாமல் அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.

டெங்குக் காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அதனால்தான் தமிழகத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏடிஸ் கொசுக்களின் ஆதிக்கமும், டெங்குவின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டு கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கூட டெங்குவைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் உதவியையோ, பிற மாநிலங்களின் உதவியையோ தமிழக அரசு கோரவில்லை. மத்திய அரசு தானாக முன்வந்து மருத்துவக் குழுவை தமிழகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், டெங்குக் காய்ச்சல் குறித்த உண்மை நிலையை அக்குழுவிடம் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 250 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆனால், டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 12,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் பொய்யான தகவலை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்திருக்கிறது. டெங்குக் காய்ச்சல் பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்போதுதான் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக ரூ.256 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. இதன்மூலம் நோய்த்தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்று வரை தொடங்கவில்லை என்பது ஐயத்துக்கு இடமின்றி உறுதியாகிறது.

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணிகளை சென்னையில் தங்கி கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளனர். டெங்கு ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, துதிபாடிகளை மேடையிலேற்றி தமது புகழைப் பாடச் சொல்லி கேட்பதிலும், அரசு செலவில் அமைக்கப்பட்ட மேடையில் அரசியல் எதிரிகளை விமர்சிப்பதிலும்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகம் கண்டுகொண்டிருக்கிறார். இப்படி ஒருவரை முதல்வராக பெறுவதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை.

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலில் தாக்கம் நாம் நினைப்பதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. தானாக பரவிய டெங்குக் காய்ச்சல் தானாக விலகி விடும் என்று தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்தால் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் இன்னும் பல மடங்கு அதிகரித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கேரளம் தவிர்த்த பிற தென்மாநிலங்களில் டெங்குக் காய்ச்சல் இல்லாத நிலையில், அங்கிருந்த மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் அம்மாநில அரசுகளின் அனுமதியுடன் அழைத்து வந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். பன்னாட்டு மருத்துவ அமைப்புகளின் ஆலோசனைகளையும் அரசு கேட்டுப் பெற வேண்டும்.

தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்கு பறிகொடுத்த மக்களின் ஓலம்தான் எதிரொலிக்கிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாத அரசின் கையாலாகத் தனத்தை காறி உமிழ்கின்றனர். தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள மக்களைக் குணப்படுத்தி பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சொந்தங்களை இழந்த மக்களின் சாபத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை