மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: – உ.பி அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

என் தமிழ்  என் தமிழ்
மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: – உ.பி அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கிய உத்தரப்பிரதேச அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகாலை அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது. அரசின் சுற்றுலா துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் தாஜ்மகால் இடம்பெறவில்லை.

முஸ்லிம் அரசர் ஒருவரால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவே தாஜ்மகாலை உத்தரப்பிரதேச அரசு நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை தாஜ்மகாலின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு தாஜ்மகாலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மொகலாயப் பேரரசர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்ட தாஜ்மகால், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முழுவதும் வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகாலை யுனெஸ்கோ அமைப்பு உலக மரபுச் செல்வங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 23 விழுக்காட்டினர் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கென்றே வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் 80லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகாலைப் பார்வையிடுகின்றனர். உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த நடவடிக்கை உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும். அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை வெகுவாகக் குறைத்து இந்தியாவுக்கு அந்நிய செலாவணி இழப்பை ஏற்படுத்தும். எனவே, உத்தரப்பிரதேச அரசின் இந்த வகுப்புவாத நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியப் பண்பாட்டின் பன்முகத்தன்மையை அழிப்பதில் வகுப்புவாதிகள் முனைப்பாக உள்ளனர். அதன் வெளிப்பாடே உத்தரப்பிரதேச அரசின் இந்த அறிவிப்பு. இதை மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் கண்டிக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தனது நடவடிக்கையை திருத்திக்கொண்டு தாஜ்மகாலை உள்ளடக்கிய புதிய சுற்றுலா கையேட்டை உடனடியாக வெளியிட வேண்டுமென வற்புறுத்துவதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை