1,600 கிலோ பட்டுக்கூடு ₹6.98 லட்சத்துக்கு ஏலம்

தினகரன்  தினகரன்

தர்மபுரி : தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 1,600 கிலோ பட்டுக்கூடு ₹6.98 லட்சத்திற்கு ஏலம் போனது. தர்மபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு விழுப்புரம், பவானி, அந்தியூர், சேலம் எடப்பாடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 விவசாயிகள் பட்டுக்கூடுகளை நேற்று ஏலத்திற்கு கொண்டுவந்தனர். இதில் வெள்ளை பட்டுக்கூடு 1,300 கிலோவும், மஞ்சள் பட்டுக்கூடு 300 கிலோ என மொத்தம் 1,600 கிலோ வெள்ளை, மஞ்சள் பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு எடுத்து வந்தனர். ஒரு கிலோ வெள்ளை பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹522 ஏலம் போனது. குறைந்தபட்சம் ₹365, சராசரி ₹462க்கும் ஏலம் போனது. மஞ்சள் பட்டுக்கூடு ஒரு கிலோ அதிகபட்சம் ₹399, குறைந்த பட்சம் ₹362, சராசரி ₹377க்கு ஏலம் போனது. நேற்று முன்தினத்தைவிட 200 கிலோ பட்டுக்கூடு கூடுதலாக வரத்திருந்தது. மொத்தம் 1,600 கிலோ பட்டுக்கூடு ₹6 லட்சத்து 98 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. நேற்று முன்தினத்தைவிட நேற்று ஒரு கிலோ வெள்ளை பட்டுக்கூடு அதிகபட்சவிலையில் ₹9 சரிந்துள்ளது. குறைந்தபட்சம் ₹65 கூடுதல் விலையிலும், சராசரி விலையில் ₹21 குறைந்திருந்தது.

மூலக்கதை