காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீட்டிப்பு : தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீட்டிப்பு : தமிழக அரசு பதில் மனு தாக்கல்

மதுரை : காவிரி நதிநீர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுடலைக்கண்ணு, ‘காவிரி ஆற்றை பாதுகாக்க, காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் குவாரிகளுக்கு 10 ஆண்டு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கே. கே. சசிதரன், ஜி. ஆர். சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தமிழகத்தில் இயற்கை வளத்துக்கு பாதிப்பு ஏற்படாமலும், சுற்றுச்சூழல் மேம்பாட்டினை கருத்தில் கொண்டும் மணல் குவாரி நடத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’ என தெரிவித்திருந்தார்.

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தமிழகத்தில் 2003ல் இருந்து பொதுப்பணித்துறை மணல் குவாரி நடத்தி வருகிறது. பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகே மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.   மணல் அள்ளுவதற்காக 54 ஆயிரம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணல் அள்ளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், தற்போது ஒரு லோடு மணல் விலை ரூ. 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

எனவே மணல்மேடு குவாரிகளை 3 மாதங்கள் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதனை கேட்ட நீதிபதிகள் இவ்வழக்கு மீதான விசாரணையை செப். 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், ஏற்கனவே விதித்திருந்த இடைக்கால தடையை செப். 21 வரை நீட்டித்தனர்.

.

மூலக்கதை