டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு குவிகிறது: பாம்புக்கறியை கவ்வி இன்று போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு குவிகிறது: பாம்புக்கறியை கவ்வி இன்று போராட்டம்

திருச்சி- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 4 பெண்கள் உட்பட 90 விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 14ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொட்டை அடித்தல், இலை, தழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு கோஷம், விவசாயியை பிணம் போல் படுக்க வைத்து ஒப்பாரி என தினமும் ஒரு போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாய சங்கத்தினர், சமூக நல அமைப்பினர் தினமும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று இரவு 7. 15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதற்கான ஏற்பாட்டை தமாகா தலைவர் ஜி. கே. வாசன் செய்து, விவசாயிகளை அவரே ஜனாதிபதியிடம் அழைத்து சென்றார். மாநில தலைவர் அய்யாக்கண்ணு, செயலாளர் பழனியாண்டி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மணி ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

அப்போது தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜனும் உடன் சென்றிருந்தார். அதேபோல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோருடன் சென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ராதாமோகன்சிங், திமுக எம்பி திருச்சி சிவாவுடன் சென்று மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ஸ்மிருதி இராணி ஆகியோரையும் விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் 16வது நாளாக ஜந்தர் மந்தரில் இன்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

வறட்சியால் விவசாயம் பாதித்ததால், சாப்பாட்டுக்கே வழி இன்றி சிரமப்படுவதை உணர்த்தும் வகையில் விவசாயிகள் பலர் வெட்டப்பட்ட பாம்பு துண்டுகளை வாயில் கவ்வியபடி நின்று போராட்டம் நடத்தினர். புதுமையான இந்த போராட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதேபோல் மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் இன்று டெல்லி வந்து, தமிழக விவசாயிகளை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்களும் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவளித்தனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள்,

பல்வேறு அமைப்பினர் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதால், இந்த போராட்டம் தேசிய போராட்டமாக உருவெடுத்து வருகிறது. போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘‘ஜனாதிபதி பிரணாப் எங்களை சந்தித்து 15 நிமிடம் பேசினார்.

கோரிக்கை மனுவை மத்திய அரசுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக கூறினார். ஆனால் பிரதமர் மோடி எங்களை சந்திக்க மறுக்கிறார்.

அவர் எங்களை தூசாக நினைக்கிறார். மோடி நினைத்தால், ஒரே நிமிடத்தில் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய முடியும்.

அதேபோல் வறட்சி நிவாரணத்தையும் உயர்த்தி வழங்க முடியும். மற்ற கோரிக்கைகளை படிப்படியாக செய்தாலும், கடன் தள்ளுபடியை உடனே செய்ய வேண்டும்.

அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம்’’ என்றார்.

.

மூலக்கதை