மாடி காய்கறி தோட்டம் அமைக்க...அழைப்பு!மானிய விலையில் விதை வழங்கல்

தினமலர்  தினமலர்

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில், மாடி காய்கறி தோட்டம் அமைக்க, மானியம் விலையில் விதை வழங்க, தோட்டக்கலை துறை முடிவு செய்து, விவசாயிகளை வரவேற்றுள்ளது.
காய்கறிகளை சிறந்த முறையில் வீட்டின் மேல் தளத்தில் வளர்ப்பதற்காகவே, மாடி காய்கறி தோட்டம் என்ற திட்டத்தை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த மாடி தோட்டம் அமைக்க, மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகின்றன.இதில், நஞ்சு இல்லாத புத்தம் புதிய இயற்கை காய்கறிகளை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், வீட்டின் மாடியில் உற்பத்தி செய்யும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களுக்கு, 6,000 எண்ணிக்கையில், மாடியில் பயிரிடப்பட வேண்டிய இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஒருவருக்கு, அதிகபட்சமாக, ஐந்து தளைகள் அடங்கிய இடுபொருட்கள் வழங்கப்படும். ஒரு தளையின் முழு விலை, 522 ரூபாய் ஆகும், ஆனால், மானிய விலையில், 200 ரூபாய் தள்ளுபடி போக, 323 ரூபாய் வசூலிக்கப்பட்டு தளை வழங்கப்படுகிறது.இந்த தளையை பெற, சம்பந்தப்பட்ட நபர்கள், ஆதார், குடும்ப அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தக நகல் என, இவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்போர், வாடகை தொடர்பான சான்றிதழ் அளிக்க வேண்டும்.
அதன் பின், தகுதியானவர்களிடம், வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை, அரைக்கீரை, முள்ளங்கி, பாகற்காய், கொத்தவரை, கொத்தமல்லி போன்ற, 10 வகை காய்கறி விதைகள், உயிர் உரங்கள் இரண்டு, உயிர் மஞ்சாணக்கொல்லி மருந்துகள் இரண்டு, நீரில் கரையும் உரம் ஒரு கிலோ, பாலித்தீன் பைகள் தேங்காய் நாருடன் ஆறு, வேம்பு எண்ணெய் 100 மி,லி. மற்றும் சாகுபடிகுறித்த கையேடு வழங்கப்படும்.
இதை பயன்படுத்தி, பகுதிவாசிகள் தங்கள் வீடுகளில் மாடி தோட்டம் அமைத்து பயன் பெற வேண்டும். மேலும், தகவலுக்கு, 94442 21095 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் என, தோட்டக்கலை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை