அரசு அலுவலகங்களில் சூரியமின் உற்பத்தி தகடு பொறுத்த பயனாளிகள்முயற்சிக்கலாமே... பாதிப்பு குறைய நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்
அரசு அலுவலகங்களில் சூரியமின் உற்பத்தி தகடு பொறுத்த பயனாளிகள்முயற்சிக்கலாமே... பாதிப்பு குறைய நடவடிக்கை தேவை

காரியாபட்டி;தனிநபர், தனியார் நிறுவனம் மற்றும் அரசு தேவைகளுக்கு நாளுக்குநாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. அதேவேளை அதற்கேற்றவாறு மின் உற்பத்தியில்லை. அரசு மின்மிகை மாநிலம் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலும், பற்றாக்குறை மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது. சூரிய மின் உற்பத்தி தகடு பொறுத்த தனியாரை ஊக்குவிக்கும் அரசு, அதை அரசு அலுவலகங்களில் ஏன் செய்யக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.
அரசு அலுவலகங்கள் கம்ப்யூட்டம் மயமாகி வருவதால், அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிக்கிறது. மக்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அரசு அலுவலக கட்டட மேற்கூரையில் சூரியமின் உற்பத்தி தகடு பொறுத்தி, மின்சாரத்தை சேமிக்க, தட்டுப்பாட்டை போக்க துறை அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும். ஊக்குவிப்புமாவட்டத்தில், மில், தொழிற்சாலைகள், பட்டாசு ஆலை அதிகம். இங்கு தங்களது வசதிக்கேற்ப மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில நிறுவனங்கள் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்து தங்களது தேவையை சமாளிக்கிறது. மற்றவர்கள் நிலை மோசமாக உள்ளது. மாவட்டத்தில் மின் தட்டுப்பாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதனை சமாளிக்க சூரியமின் தகடு பொறுத்தி மின் உற்பத்தி செய்பவர்களுக்கு அரசு மானியம் வழங்கி தனியாரை ஊக்குவித்து வருகிறது.
சூரியமின் உற்பத்தி
சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறும் நிறுவனங்கள் ஓரளவிற்கு மின்சாரத்தை மிச்சப்படுத்தி வருகின்றன. இது வரவேற்கக் கூடியதாக உள்ளது. தனி நபர் சூரிய மின் உற்பத்தி வரவேற்கக் கூடியதாக இருக்கும் போது, அதையே ஏன் அரசு அலுவலக கட்டடங்களில் பொறுத்தக் கூடாது என்ற கேள்வி எழுகிறது. அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் சொந்த கட்டடங்களில் செயல்படுகின்றன.
தற்போது அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. தாலுகா அலுவலகத்தில் பயனாளிகள் விண்ணப்பித்த சில நாட்களிலே பட்டா, சிட்டா, வருமானம், ஜாதி உட்பட அனைத்து சான்றிதழ்களும் இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கம்ப்யூட்டரில் கிராம பணி
நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் பணி உத்தரவு, மற்ற புள்ளி விபரங்களை கம்ப்யூட்டர் மூலம் கையாளுகின்றனர். அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாவதால் வேலை பளு குறைத்துள்ளது.
அதே சமயம், மின் சப்ளை இல்லாவிட்டால் ஒரு வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளது. அணு, காற்றாலை, அனல், சூரிய மின்சக்தி உட்பட பல நிலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டாலும், பற்றாக்குறையை சமாளிக்க, மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை தவிர்க்க முடியாததாக உள்ளது. அன்றைய நாளில் அரசு அலுவலக பணிகள் முடங்குகின்றன. பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சொந்த கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில், தேவையான அளவுக்கு மின் உற்பத்தி செய்ய சூரியமின் உற்பத்தி தகடு பொறுத்தினால் மின் தேவையை சமாளிக்கலாம். அனைத்து நாட்களிலும் பணிகள் தாமதமின்றி நடைபெறும். சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பணி பாதிப்பு
காரியாபட்டி சுரேஷ்: அறிவிப்பில்லாத மின் தடை, மாதாந்திர பணிக்காக மின் தடை ஏற்பட்டால் சான்றிதழ் பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தற்போது பள்ளி சேர்க்கைக்கு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. மின்சாரம் இல்லை என்றால் எந்த பணியும் நடைபெறாது என்பது அதிகாரிகளுக்கும் தெரியும்.
ஒரு நாள் பணிகள் நடக்காவிட்டால் பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அப்படியிருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று ஏற்பாடு செய்வது இல்லை. ஜெனரேட்டர் வாங்கினால் எரிபொருள் செலவு என பல குளறுபடி ஏற்படும். எளிய முறையான, எந்த பிரச்னையும் இல்லாத சூரியமின் உற்பத்தி தகடுகளை அரசு அலுவலக கட்டட மேற்கூரையில் பொறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை