புதிய மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பு வழங்க ரூ.5,000! 10 நாளில் ரூ.7.50 கோடி ஆளுங்கட்சியினர் வசூல்

தினமலர்  தினமலர்
புதிய மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பு வழங்க ரூ.5,000! 10 நாளில் ரூ.7.50 கோடி ஆளுங்கட்சியினர் வசூல்

முகலிவாக்கத்தில், புதிதாக கட்டி வரும் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் இணைப்பு வழங்க, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், வீட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 10 நாட்களில், 15 ஆயிரம் வீடுகளில், 7.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்துார் மண்டலம், 156வது வார்டு, முகலிவாக்கத்தில், 375 தெருக்கள் உள்ளன. இங்கு, 10 ஆயிரம் வீடுகளில், 45 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.ஊராட்சியாக இருந்தபோதே, இப்பகுதியில் கழிவுநீர் இணைப்பு வசதி இல்லை. மாநகராட்சியானதும், பெரும்பாலான தெருக்களில், 15 கோடி ரூபாயில், குடிநீர் திட்ட பணிகள் நடக்கின்றன.
அடையாறு ஆற்றின் அருகில், முகலிவாக்கம் பகுதி உள்ளதால், 2015 டிசம்பரில் பெய்த கனமழையில், பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தெருக்களில், 2 அடி அகலம் முதல், 5 அடி அகலம் வரையிலான மழைநீர் வடிகால், கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
முகலிவாக்கத்தில், ஐந்து ஆண்டுகளில், 60க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வார்டை பொறுத்தமட்டில், கழிவுநீர் இணைப்பு வசதி இல்லாததால், கீழ்நிலை தொட்டி அமைத்து, கழிவுநீரை தேக்கி லாரி மூலம் வெளியேற்ற, குடிநீர் வாரியம் வலியுறுத்தி உள்ளது.ஆனால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி கான்கிரீட் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய் மூலம், புதிதாக கட்டிவரும் மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டு உள்ளன.
வார்டு ஆளுங்கட்சி நிர்வாகிகள், ஒரு வீட்டுக்கு, 5,000 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்து, இணைப்பு வழங்குகின்றனர். இது, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை, லாரி மூலம் கழிவுநீர் அகற்ற, 1,500 ரூபாய் செலவு ஆவதாக புலம்பும், வீட்டு உரிமையாளர்களை குறிவைத்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்தோர், பணம் வாங்கி கொண்டு, திருட்டுத்தனமாக முறைகேடான இணைப்பு கொடுக்கின்றனர்.
கடந்த, 10 நாட்களாக, நள்ளிரவில், இந்த திருட்டுத்தனம் அமோகமாக நடக்கிறது. ஒரு முறை, 5,000 ரூபாய் செலுத்தினால், ஒவ்வொரு முறையும் லாரி மூலம் கழிவுநீரை அகற்ற வேண்டியதில்லை என, இதுபோன்ற முறைகேட்டுக்கு, பல வீட்டு உரிமையாளர்கள் துணை போவதால், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் தங்களைத்தானே பாதிக்கிறது, என்ற மனநிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. மழைக்காலங்களில், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தண்ணீர் செல்லத்தான் மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. வெயில் காலங்களில், வறண்டு இருக்க வேண்டும். ஆனால், கடும் வெயிலிலும், வடிகாலில் கழிவுநீர் தான், அதிகம் செல்கிறது.
மழைநீர் வடிகாலில், கழிவுநீர் இணைப்பு வழங்கியதை கண்டறிந்து தடுப்பதுடன், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர்.
தடுக்க முன்வருவரா?கடந்த, 10 நாட்களில், 15ஆயிரம் வீட்டு உரிமையாளர்களிடம், 5,000 ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். அந்த வகையில், 7.50 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி விஜிலென்ஸ் துறை, விசாரித்தால் தான், இதுபோன்ற முறைகேட்டை தடுக்க முடியும்.
அதிகாரிகள் உடந்தைமழைநீர் வடிகால் முடிந்த பகுதியில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தோர், ஒவ்வொரு வீடாக சென்று, 'வடிகாலில் கழிவுநீர் இணைப்பு தருகிறோம்' என, 5,000 ரூபாய் கேட்கின்றனர். சிலரை தவிர, பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், இந்த முறைகேட்டுக்கு துணை போகின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை.பகுதிவாசிகள்
ஆளுங்கட்சியினர் மிரட்டல்வடிகாலில் இணைக்கும் கழிவுநீர் குழாயை துண்டித்து, அடைக்கச் சென்றால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர்களே நேரடியாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு, மேல் அதிகாரிகளும், உறுதுணையாக இல்லை.மண்டல அதிகாரிகள்
-நமது நிருபர் -

மூலக்கதை