17 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர்... ஆதலினால், மறியல்! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

தினமலர்  தினமலர்
17 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர்... ஆதலினால், மறியல்! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

அவிநாசி : குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, திருமுருகன்பூண்டி மற்றும் பல்லடத்தில், பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 11 வது வார்டுக்குட்பட்ட பழனியப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், கணபதி நகர், காமாட்சி நகரில் வசிக்கும் பொதுமக்கள், ராக்கியாபாளையம் மெயின் ரோட்டில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொது மக்கள் கூறியதாவது:தகவலறிந்து சென்ற, பேரூராட்சி அலுவலர்கள், "அனைத்து வீதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதி கூறினர். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி கூறுகையில், ""குடிநீர், 17 நாட்களுக்கு ஒரு முறையே வினியோகம் செய்யப்படுகிறது. அதிக நாள் சேமித்து வைத்து குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதிப்படுகின்றனர். இரண்டு ஆழ் குழாய் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை.அனைத்து வீதிகளுக்கும் ஒரே நேரத்தில் வினியோகம் செய்யப்படுவதால் மிக குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கிறது. எனவே வீதிகளுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்க வேண்டும்,'' என்றார்.
பல்லடத்திலும்...சுல்தான்பேட்டை ஒன்றியம்,செஞ்சேரிபுத்தூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், 3,500க்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை என கூறி, நேற்று அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பி.டி.ஓ., நவமணி, டி.எஸ்.பி., மீனாட்சி, பொதுமக்களிடம் பேசினர். "ஒரு வாரத்துக்குள் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக,' உறுதி அளித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக, பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், "பிற பகுதிகளுக்கு கிடைக்கும் அளவுக்கு, குடிநீர் எங்களுக்கு வினியோகிக்கப்படுவதில்லை.இங்குள்ள இரண்டு ஆழ்குழாய் கிணறுகளில், தற்போது ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுவதுடன், பத்து நிமிடங்களோடு நிறுத்தப்படுகிறது என்றனர். எனவே வாரம் ஒருமுறையாவது, அத்திக்கடவு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.

மூலக்கதை