வனப்பகுதிகளில் இறைச்சிக்காக மான்கள்..வேட்டை!. சமூக விரோதிகளால் தொடரும் அட்டூழியம்

தினமலர்  தினமலர்
வனப்பகுதிகளில் இறைச்சிக்காக மான்கள்..வேட்டை!. சமூக விரோதிகளால் தொடரும் அட்டூழியம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இறைச்சிக்காக மான்கள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது; இதனால், வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலையில் தொடங்கி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், செஞ்சி ஆகிய பகுதிகளில் காடுகள் உள்ளன. இவை, காப்புக் காடுகளாக இருந்தவரை, வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பாக இருந்தன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், தரைப்பகுதியில் இருந்த காப்புக் காடுகள் 80 சதவீதம் அழிக்கப்பட்டு, வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் கிடைத்தாலும், இங்கு வசித்த வனவிலங்குகள் பாதுகாப்பு இல்லாமல், பெரும்பகுதி அழிந்து விட்டன.
தற்போது, மான், நரி, முயல், காட்டுப் பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட விலங்குகள் மட்டுமே, உயிர் அச்சத்துடன் வசித்து வருகின்றன. சிறு விலங்குகள் அழிந்ததால், அவற்றை உணவாக கொள்ளும் நரி இனமும் வேகமாக அழிந்து வருகிறது.
குறிப்பாக, சின்னசேலம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, செஞ்சி மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ள காடுகளில் மான்கள் அதி களவில் வசித்து வருகின்றது. பல இடங்களில் மந்தை, மந்தையாக மேய்ந்து வருகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மான்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் காடுகளில் கிடைப்பதில்லை. வறட்சி காரணமாக, குடிநீரை தேடி வயல்வெளிகளை நோக்கி மான்கள் செல்கின்றன.
இந்த சமயங்களில் மான்கள் பாசன கிணற்றில் விழுந்தும், நாய்கள் கடித்தும், மின்வேலியில் சிக்கியும் உயிரிழந்து வருகின்றது. இதேபோல் பல மான்கள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற காரணங்களாலும், வேட்டையாலும் மான்களின் எண்ணிக்கை, மாவட்டத்தில் வேகமாக குறைந்து வருகிறது.
இதற்கடுத்து, சமூக விரோதிகளால், தொடர்ந்து மான்கள் வேட்டையாடப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சட்ட விரோதமாக துப்பாக்கிகளால், மான்கள் வேட்டையாடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இரவு நேரத்தில் தண்ணீர், உணவு தேடி வரும் மான்களை துப்பாக்கியால் சுட்டு, இறைச்சியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மான் மட்டுமின்றி, முயல், காட்டுப்பன்றி, மயில் ஆகியவையும் வேட்டையாடப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், மாவட்டத்தில் மான்களின் எண்ணிக்கை சில நுாறுகளாக குறைந்து, முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது.
காடுகளின் செல்வமான வன விலங்குகளை பாதுகாப்பது அவசியமாகும். மான் வேட்டையை தடுக்க வனத்துறையும், போலீஸ் துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன், வறட்சியால் தவிக்கும் வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் கிடைக்க வனப்பகுதியில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
நாட்டு துப்பாக்கி நடமாட்டம்உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கிகளை கொண்டு மான் உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப் படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன், போலீஸ் உயரதிகாரிகளின் நடவடிக்கையால், கல்வராயன் மலைப்பகுதியில், சட்டவிரோதமாக வைத்திருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் பிறகும் நாட்டு துப்பாக்கிகள் பயன்பாடு குறையவில்லை. மேலும், ஒரு உரிமத்தை வைத்துக்கொண்டு, பல துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளது.மாவட்டத்தில் சட்டவிரோதமாக புழக்கத்தில் உள்ள உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும். இதன் மூலம் மான்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க முடியும்.
சமூக விரோத 'நெட் வொர்க்'மான்களை வேட்டையாடுவதற்காகவும், அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காகவும், பெரிய 'நெட் வொர்க்' இயங்கி வருகின்றது. இதில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு, சில அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.வேட்டையாடப்படும் மான்களின் தோல், கொம்பு, எலும்புகள் நீக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்படுகிறது; சதை பகுதியை மட்டும் விற்பனை செய்கின்றனர். நகரங்களில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கும் மான் இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது.இதேபோல்,சில ஓட்டல்களிலும் மான் இறைச்சி விற்கப்படுகின்றது.




-நமது நிருபர்-

மூலக்கதை