அங்கீகாரம் இல்லாத மனைப்பதிவு அறிக்கை அளிக்க ஐ.ஜி உத்தரவு - பதிவுத்துறையில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அங்கீகாரம் இல்லாத மனைப்பதிவு அறிக்கை அளிக்க ஐ.ஜி உத்தரவு  பதிவுத்துறையில் பரபரப்பு

சென்னை- ஐகோர்ட் உத்தரவை மீறி, அங்கீகாரம் இல்லாத மனைப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 15க்குள் அறிக்கை அளிக்க பதிவுத்துறை ஐஜி செல்வராஜ் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விளை நிலங்களில் அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடந்த செப்டம்பர் 8ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி அலுவலகம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி அங்கீகாரம் இல்லாத மனைகளில் பத்திரம் பதிவு செய்யக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதையும் மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஐஜிக்கு புகார் வந்ததை தொடர்ந்து, கடந்த நவம்பரில் லே அவுட் அப்ரூவல் இல்லாத மனைகளில் பத்திரம் பதிவு செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத மனைகளில் வீடு வாங்கிய பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பத்திரப்பதிவு செய்ய உயர் அதிகாரிகளை அணுகினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ரூ. 20 லட்சம் வரை பத்திரத்திற்கு கமிஷன் பெற்றுக்கொண்டு பத்திரம் பதிவு செய்தனர். குறிப்பாக, நீலாங்கரை, தாம்பரம், கும்பகோணம், அதிராமப்பட்டினம், அய்யம் பேட்டை உட்பட  100க்கும் மேற்பட்ட சார்பதிவு அலுவலகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக, கொடைக்கானல் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.   இதை தொடர்ந்து, ‘தமிழகம் முழுவதும் இதுபோன்ற பத்திரப்பதிவு நடந்து வரும் நிலையில், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்’ என்று அவர் கேள்வி எழுப்பி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



அந்த வழக்கின் பேரில், கடந்தாண்டு செப்டம்பர் 9க்கு பிறகு அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்யப்பட்ட சார்பதிவு அலுவலகங்களின் முழு விவரங்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பதிவுத்துறை ஐஜி செல்வராஜ் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘டிடிசி, சிஎம்டிஏ அப்ரூவல் இல்லாத எந்த மனையாக இருந்தாலும், பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பான முழு விவரங்களையும் பதிவுத்துறை தலைமைக்கு வரும் ஏப்ரல் 15க்குள்  அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பதிவுத்துறை ஐஜியின் இந்த திடீர் உத்தரவு பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை