உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் முற்றுகை: தம்பதி தீக்குளிக்க முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு  விவசாயிகள் முற்றுகை: தம்பதி தீக்குளிக்க முயற்சி

கோபி- கோபி அருகே விளைநிலம் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று மின் ஊழியர்களை முற்றுகையிட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம், ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் வாழவாடி வரை 400 கிலோவாட் மின்திறன் கொண்ட உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மொத்தம் 190 கிமீ தூரத்துக்கு 50 மீட்டர் உயரத்தில் 555 டவர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 370 டவர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கந்தப்பாடி, வடக்கு தயிர்பாளையம், வளையம்பாளையம் பகுதிகளில் மின்வாரியத்தினர் டவர் அைமக்கும் பணியை துவங்கி உள்ளனர்.

80 இடங்களில் டவர் அமைக்க சிமென்ட் பெட் போடப்பட்டுள்ளது.
மின்கோபுரம் அமைப்பதால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி ஏற்கனவே இப்பகுதி விவசாயிகள் ஈரோடு கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை மின்கோபுரம் அமைக்க மின் ஊழியர்கள் வடக்கு தயிர்பாளையம் பகுதிக்கு வந்தனர். அவர்களை விவசாயிகள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர்.

இதுபற்றி மின் ஊழியர்கள் கலெக்டருக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில், கோபி டிஎஸ்பி செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாந்தமூர்த்தி, விவேகானந்தன், காயத்ரி உட்பட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில், தங்களது வீட்டு மேல்பகுதியில் மின்கம்பி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி ரவிச்சந்திரன்(50), அவரது மனைவி கமலம் ஆகியோர் உடலில் கெரசின் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கெரசின் கேனை பிடுங்கி எறிந்தனர்.



.

மூலக்கதை