இட ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்ட மத்திய அரசு முயற்சி: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலைக்க முடிவு - மாநிலங்களவையில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இட ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்ட மத்திய அரசு முயற்சி: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலைக்க முடிவு  மாநிலங்களவையில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி- இட ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்ட மத்திய அரசின் முயற்சியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறி மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சமூக ரீதியாகவும் மற்றும் கல்வியிலும் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக புதிய தேசிய ஆணையம் ஒன்றை தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

அந்த அமைப்புக்கு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்தை (ஓபிசி) கலைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.



எஸ்சி, எஸ்டி தேசிய ஆணையத்தை போல, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் குறைகேட்பு ஆணையமாக்கும் வகையில் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கவே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது.

மாநிலங்களவை நேற்று கூடியதும், சமாஜ்வாடி உறுப்பினர் ராம்கோபால் யாதவ், ‘தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்குவதாக உறுதி அளித்து விட்டு தற்போது அதை கலைக்க அரசு முயற்சிக்கிறது.   இது தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சதி என்று குற்றம் சாட்டினார்.

பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உறுப்பினர்களும், ஓபிசி ஆணையம் கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் பேசுகையில், இடஒதுக்கீடு தொடரும் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியுள்ளார்.

எனவே இடஒதுக்கீடு தொடரும். ஓபிசி ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கவே அரசு இத்தகைய முடிவு எடுத்திருக்கிறது’ என்றார்.

ஆனால் தொடர்ந்து அமைச்சரின் விளக்கத்தை ஏற்காமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டதால் அமளி ஏற்பட்டது.

இதனால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

.

மூலக்கதை