25 நாட்களில் 200 இடங்களில்... குவிந்தது முதலீடு: தொடர்கிறது ரெய்டு!வருமான வரித்துறையினர் அதிரடி!

தினமலர்  தினமலர்
25 நாட்களில் 200 இடங்களில்... குவிந்தது முதலீடு: தொடர்கிறது ரெய்டு!வருமான வரித்துறையினர் அதிரடி!

வங்கிக் கணக்கில் அதிக பணம் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, கோவை மண்டலத்தில் கடந்த 25 நாட்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 'ரெய்டு' நடத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தவிர மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ளன. சென்னைக்கு அடுத்து அதிக வருமான வரி செலுத்தும் மண்டலமாக கோவை உள்ளது. அரசின் உதவிகள் அதிகம் இல்லாமல் வளர்ந்த நகரம், பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமின்றி, உலகளவிலும் புகழ்பெற்ற மாநகரம் என்ற பெருமை கோவைக்கு உள்ளது.
அதிலும் முதலிடம்!
இத்தகைய சிறப்புகள் ஒரு புறமிருக்க, வரி ஏய்ப்பு, கருப்புப் பணங்களால் சொத்து குவிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்களுக்கும் கோவையில் பஞ்சமில்லை. இதுபோன்ற முறைகேடுகளால் ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து வந்த வரி ஏய்ப்பு முறைகேடுகள் மற்றும் கறுப்புப் பணப்புழக்கத்துக்கு முடிவு கட்டவே, கடந்த நவம்பரில் பண பரிவர்த்தனை மீது மத்திய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது.
அந்த அறிவிப்பு வெளியானதும், வங்கிகளில் ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டது. அவற்றில், சந்தேகிக்கும் வகையில் அதிக முதலீடுகள் செய்யப்பட்ட வங்கி கணக்கு விபரங்கள் அடங்கிய பட்டியல், தேசிய அளவில் தயாரிக்கப்பட்டு வருமானவரித்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பேரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், வருமான வரித்துறையினரால் தொடர்ச்சியாக 'ரெய்டு' நடத்தப்பட்டு வருகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள கோவை மண்டல வருமானவரித்துறை அலுவலகத்திலும், சத்தமின்றி இந்த 'ரெய்டு' பல நாட்களாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 1 முதல் இன்று (நேற்று) வரை, 25 நாட்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரித்துறையினர் 'ரெய்டு' நடத்தியுள்ளனர். தினமும் 'ரெய்டு' தொடர்வதால், வங்கிகளில் முறைகேடாக பணம் முதலீடு செய்தவர்கள், பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
யாரும் தப்ப முடியாது!
வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மண்டலத்தில் தினமும் 'ரெய்டு' நடப்பது உண்மை தான். வங்கிகளில் முறைகேடாக பணம் முதலீடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. எதிர்வரும் நாட்களிலும் 'ரெய்டு' தொடரும். இந்த பட்டியலில் இருப்போரிடம் முழுமையான விசாரணை மற்றும் சோதனைகள் நடத்தப்பட்ட பின்பே, வரி ஏய்ப்புகள் குறித்த முழு விபரங்களை துறை வெளியிடும்' என்றனர்.நகைத்தொழில் செய்வோர், ஜவுளி, ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி வணிகர்கள் என இந்த பட்டியலில், பல தரப்பினரும் கலந்து இருப்பதாக, வருமானவரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கோவை மண்டலத்தில் முறைகேடாக பணம் பதுக்கியவர்கள் யார், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை எவ்வளவு உள்ளிட்ட விபரங்களை வருமானவரித்துறையினர் வெளியிடும் போது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், வரி ஏய்ப்பு செய்தோர் குறித்த விபரங்கள், முழுமையாக வெளிவருமா என்பதே எல்லோருக்குமான பொதுவான சந்தேகமாகவுள்ளது.-நமது நிருபர்-

மூலக்கதை