சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு தொடர்பான மனு ஐகோர்ட்டுக்கு மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு தொடர்பான மனு ஐகோர்ட்டுக்கு மாற்றம்

மதுரை- சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஆணழகன்.

அதிமுக பிரமுகர். முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன்.

இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 பேரின் ஆதரவுடன் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தாத நிலையில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் வாக்களிக்க சாத்தியமில்லை.

ஏனெனில் அவர்களால் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடியாது. சிறை வைக்கப்பட்டு, நிர்ப்பந்தத்தில் இருந்ததால் மனசாட்சிக்கு எதிராக எம்எல்ஏக்களை வாக்களிக்க வைத்துள்ளது.

பஞ்சாயத்து வார்டு உறுப்பினரை கூட ரகசியமாக தேர்வு செய்ய முடிகிறது. எனவே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்.



இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள், ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘இந்த மனு நிலைக்கத்தக்கதல்ல. விசாரணைக்கு ஏற்கக்கூடாது.

இதேபோன்ற மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் விசாரணையில் உள்ளது. எனவே இந்த மனுவை இங்கு விசாரிக்க வேண்டிய தேவை இல்லை’ என்றார்.

மனுதாரர் வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘இதுபோன்ற வழக்கில் நிவாரணம் பெறுவதற்கு மனுதாரருக்கு உரிமை உண்டு. எனவே மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து, மனுமீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை