ரூ.454.48 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு - பிஆர்பி உள்பட 2 கிரானைட் நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.454.48 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு  பிஆர்பி உள்பட 2 கிரானைட் நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மேலூர்- கிரானைட் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு ரூ. 454. 48 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2 நிறுவனங்கள் மீது இன்று மேலூர் கோர்ட்டில் 1340 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூரை சுற்றி உள்ள கீழவளவு, இ. மலம்பட்டி, திருவாதவூர், ஒத்தக்கடை பகுதியில் செயல்பட்ட கிரானைட் குவாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மொத்தம் 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் ஏற்கனவே 65 வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலூர் குற்றவியல் கோர்ட்டில் 2 வழக்குகளுக்கு அரசு வக்கீல் ஷீலா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

உடன் தனி அதிகாரிகள் குருசாமி, முத்துப்பாண்டி இருந்தனர்.

கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் பாறை புறம்போக்கு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கே. எம். சோலைராஜன், பிஆர். பழனிச்சாமி மற்றும் 29 பேர் மீது வழக்கு பதிவானது.

இதில், அரசுக்கு 448. 95 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக 910 பக்க குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு குற்றப்பத்திரிக்கை ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனில் இடையபட்டியில் உள்ள கண்ணனேந்தல் குளத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் லட்சுமி மற்றும் 10 பேர் மீது அரசுக்கு 5. 53 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 430 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கலானது. இவ்விரு கிரானைட் நிறுவனங்கள் மீது மொத்தம் ரூ. 454. 48 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 1340 பக்க குற்றப்பத்திரிக்கை மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்னிலையில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.


.

மூலக்கதை