சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் - ஸ்டாலின் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்  ஸ்டாலின் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை- சட்டசபையில் நடந்த எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து மு. க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில், வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு, சட்டப் பேரவையில் கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது.

இதற்கான தீர்மானம் எடுத்து கொள்ளப்பட்ட போது, எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் கே. ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை பேரவை தலைவர் தனபால் ஏற்காமல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.



இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையிலிருந்து அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதில் மு. க. ஸ்டாலின் சட்டை கிழிந்தது. திமுக உறுப்பினர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.

அவர்களை வெளியேற்றிய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை பேரவை தலைவர் நடத்தினார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் போது, பேரவை தலைவர் இருக்கையில் இல்லை.

இதன்மூலம், திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்ற முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது தெரிய வருகிறது. சீருடை பணியாளர் விதிகளுக்கு முரணாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி, சாதாரண அவைக்காவலர் உடையில் அவைக்குள் வந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றியுள்ளார்.

பேரவை தலைவரும், பேரவை செயலாளரும் கூட்டுச்சேர்ந்து திட்டமிட்டு போலீசார் உதவியுடன் எங்களை வெளியேற்றி மிக பெரிய ஜனநாயக துரோகம் செய்துள்ளனர். சட்டப் பேரவை விதிகளுக்கு முரணாகவும், அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாகவும் பேரவை தலைவர் செயல்பட்டுள்ளார்.

எனவே, சட்டப் பேரவையில் 18ம் தேதி கொண்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தற்காலிக தலைமை நீதிபதி குலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி ஆர். மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘சட்டமன்றத்தில் திமுகவை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார்கள். இது சட்ட விரோதமானது.

எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். சபாநாயகர் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை.

கூவத்தூரில் எம்எல்ஏக்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தார்கள். அவர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

எனவே, சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‘‘கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்தது, எம்எல்ஏக்களை பஸ்சில் ஏற்றி வந்தது மற்றும் சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

.

மூலக்கதை