மஞ்சு விரட்டுக்கு அனுமதி மறுப்பு - புதுகை அருகே மக்கள் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மஞ்சு விரட்டுக்கு அனுமதி மறுப்பு  புதுகை அருகே மக்கள் ஆவேசம்

பொன்னமராவதி- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் கடந்த 12ம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அன்று அனுமதியளிக்கவில்லை.

இதனால் இன்று (22ம் தேதி) மஞ்சுவிரட்டு நடத்த இப்பகுதி பொதுமக்கள் கேலரி, பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும், தேங்காய் நார் போட்டும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், இங்கு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.

இதையடுத்து வேந்தன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து வேந்தன்பட்டியில் நேற்று மாலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பஸ்கள் நிறுத்தப்பட்டது.

இலுப்பூர் ஆர்டிஓ வடிவேல் பிரபு, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மஞ்சுவிரட்டு நடத்த அரசாணையில் வேந்தன்பட்டி பெயர் இல்லை.

பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதை ஏற்க மறுத்த அவர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திடீரென மஞ்சுவிரட்டு நடத்தக்கூடாது எனக் கூறினால் என்ன செய்வது? இங்கு மஞ்சுவிரட்டு நடத்தும் வரை போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று விழா குழுவினர் தெரிவித்தனர். வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சில இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் வருவாய்த்துறையினரும் முகாமிட்டிருந்தனர்.

இரவு 9. 30 மணிக்கு சப் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து ஒரு வாரத்தில் மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததால் 8 மணி நேரமாக நடந்த போராட்டம் கைவிடப்படடது.

.

மூலக்கதை