ஸ்டென்ட் விலை குறைத்தும் பலனில்லை ஆபரேஷன் கட்டணங்கள் உயர்கிறது: லாப இழப்பை ஈடுகட்ட புது திட்டம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஸ்டென்ட் விலை குறைப்பால் ஏற்பட்ட லாப இழப்பை ஈடுகட்ட, ஆபரேஷன் கட்டணங்களை உயர்த்த மருத்துவமனைகள் திட்டமிட்டுள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இதயநோய் சிகிச்சையில், தமனியில் அடைப்பை நீக்கி மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்க ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. இவற்றின் விலை ₹23,625 தொடங்கி 2 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் விலை குறைவாக இருந்தாலும் அவை போதுமான அளவில் கிடைக்காததால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றின் விலை பலமடங்கு இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இதயநோய் சிகிச்சை பெறுவதற்கு சாத்தியமின்றி போய்விடுகிறது. இதை தவிர்க்க, உலோக ஸ்டென்ட் விலை உச்சவரம்பு ரூ.7,260 ஆகவும், மருந்துடன் கூடிய ஸ்டென்ட் விலை ரூ.29,600 ஆகவும் உச்சவரம்பை 85 சதவீதம் குறைத்து, மத்திய அரசு கடந்த 13ம் தேதி அமலுக்கு கொண்டு வந்தது. ஆனாலும், சில உற்பத்தியாளர்களும், விநியோகஸ்தர்களும், இறக்குமதியாளர்களும் ஏற்கனவே மருத்துவமனைகளுக்கு வழங்கியிருந்த ஸ்டென்ட்களில் விலையை திருத்தி புது லேபிள் ஒட்ட வேண்டுமென்ற பெயரில் திரும்ப பெற்று, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, உயிர்காக்கும் ஸ்டென்ட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.அதே நேரத்தில், காப்பீட்டு நிறுவனங்களும் இது தொடர்பான விவரங்களை பெற மருத்துவமனைகளை அணுகியுள்ளன. இதுகுறித்து காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:  நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அதிக கட்டணத்தை நோயாளிகளிடம் வசூலிக்க கூடாது என தேசிய விலை கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களை பொறுத்தவரை, அந்தந்த சிகிச்சைக்கு உள்ள பேக்கேஜ்களின் அடிப்படையில் பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்டென்ட் விலை குறைக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ற பலனை வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான பில்லிங் நடைமுறை தொடர்பாக அரசும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் கோரியுள்ளது.ஆனால், சில மருத்துவமனைகள், குறைந்த விலை ஸ்டென்ட் பொறுத்துவதாக இருந்தாலும், இதய அறுவை சிகிச்சைகளுக்கான கட்டண பேக்கேஜ் குறைய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளன. அதாவது, ஆபரேஷன் கட்டணங்களுக்கு  விலை கட்டுப்பாடு இல்லை. இதய நோய்க்கான ஆபரேஷன் கட்டணங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் பேக்கேஜ் விலை தற்போது உள்ள நிலையிலேயே நீடிக்கும் என கூறியுள்ளன. சில மருத்துவமனைகளே இவ்வாறு கூறியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமான பட்டியல் எதுவும் வழங்கவில்லை என்றார்.ப்ளஸ்: இதயத்தில் அடைப்பை நீக்க பயன்படும் ஸ்டென்ட் உலோகத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. 2002ம் ஆண்டில், மருந்து தடவப்பட்ட ஸ்டென்ட் அறிமுகமானது. இதனால் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. உலோக ஸ்டென்ட்டுக்கு மாற்றாக, இதய திசுவோடு கலந்துவிடும் ஸ்கேபோல்டு ஸ்டென்ட்களும் உள்ளன.

மூலக்கதை